மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை மீள்குடியேற்ற திட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முசலி சந்தை கட்டிடம், கடந்த பல மாத காலமாக பராமரிப்பு அற்ற நிலையில் இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் ஊடாக பணம் ஒதுக்கீடு செய்து, முசலி பிரதேச சபையினால் குறித்த சந்தை நிர்மாணிக்கப்பட்டது.
எனினும் குறித்த சந்தை இது வரைக்கும் யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் ஆடு, மாடுகள் உறைவிடமாக குறித்த கட்டிடமாக இருந்து வருகின்றது.
முசலி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தன்னுடைய சுய நலத்துக்காக குறித்த பகுதியில் சந்தை தொகுதியை கட்டியதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பல இலட்சம் ரூபா மக்கள் பணத்தில் அமைக்கப்பட்ட குறித்த சந்தை தொகுதி கட்டிடங்கள் இது வரைக்கும் முசலி பிரதேச சபை பராமரிக்காமல் அசமந்த போக்கில் செயற்படுகின்றது.
எனவே இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, பிரதேசத்துக்குரிய சொத்துகளை பாதுகாக்குமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.