வவுனியாவில் மழை காரணமாக 1130 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 127 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் இரு நலன்புரி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த போதும் புதன்கிழமை தெளிவான வானிலை காணப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், குளத்து நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக இது வரை 1130 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 127 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 32 வீடுகள் முழுமையாகவும் 103 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
மருக்காரம்பளை மற்றும் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் இரு நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.