ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து செயற்படுவதன் காரணமாக உலக நாடுகளிடம் இலங்கைக்கு முக்கியமான இடம் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அன்று நிதியுதவிகளை வழங்காத நாடுகள் கூட தற்போது நிதியுதவியை வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டுச வங்கி ஒப்பந்தம் தொடர்பான சட்டமூலம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே நிதியமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணைவு காரணமாக உலகில் இலங்கை தொடர்பான நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜப்பான் நேற்று 3 ஆயிரத்து 500 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியது.
கடந்த காலத்தில் 7 முதல் 8 வீத வணிக வட்டியில் கடன் பெறப்பட்டது. அன்றைய வெளிநாட்டு கொள்கை இதுவாகவே இருந்தது. தற்போது எமக்கு 0.05 வீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதனால், 7 வீதம் மீதமாகியுள்ளது. இது வரி செலுத்துவோரின் பணம். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஆயிரம் மில்லியன் டொலர்களை பெறமுடியும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.