வவுணதீவில் காட்டு யானை அட்டகாசத்தால் 5 வீடுகள் சேதம்

260

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகள் நடாத்திய அட்டகாசத்தில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாவற்கொடிச் சேனையில் 3 வீடுகளும், காந்தி நகரில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதில் 3 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உணவுப் பொருட்கள், தொழில் உபகரணங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கென வழங்கப்பட்ட வீடு ஒன்றும் அடங்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரதேசத்துக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை, காந்திநகர், நொச்சண்டசேனை, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தாம் தொடர்ச்சியான காட்டு யானைத் தாக்கத்துக்கு முகம் கொடுப்பதாகவும் இதனால் தமது அன்றாட விவசாய, மீன்பிடி, செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

தினசரி இரவு வேளைகளில் உயிரச்சத்துடன் நாட்களைக் கடத்த வேண்டியுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

படுவான்கரைப்பகுதியில் கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி, வவுணதீவு பகுதிகளில் காட்டு யானைத்தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் வீடுகள், விவசாய நிலங்கள், தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் யானைகள் கிராமங்களுக்குள் வருகைத் தரும்போது இரவு வேளைகளில் யானைகளை விரட்டி சிரமப்படுவதனால் பகல் வேளைகளில் தொழில்களுக்குச் செல்லாமலும், பிள்ளைகள் பாடசாலைலைக்குச் செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரதேசங்களுக்குச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம், பிரதேச செயலாளளுடன் தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை செய்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

SHARE