
உலகின் ஏதோவொரு மூலையில் ஏதாவதொவொரு அனர்த்தம் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பூமி அதிர்ச்சி, பூகம்பம், சூறாவளி, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏன் இடம்பெறுகின்றன என மனிதன் சிந்திப்பதில்லை.
அவ்வாறு சிந்தித்தாலும் அதற்கு விஞ்ஞானக் காரணங்களைக் கூறிவிட்டு மனிதன் அதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றான்.
ஆனால், மனிதனால் மேற்கொள்ளப்படுகின்ற சில விடயங்களும் இயற்கை அனர்த்தங்களுக்கு காரணமாகவுள்ளது.
இன்னென்ன விடயங்கள் புரியப்படுகின்றபோது இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமென்று இறைதூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் அறிவித்து விட்டார்கள்.
பின்வரும் நிலைமைகள் காணப்பட்டால் அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், பூகம்பத்தையும், மனிதன் உருமாற்றப்படுவதையும் வானத்திலிருந்து கற்றகள் எரியப்படுவதையும் எதிர்பாருங்கள் என நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் -திர்மிதி.)
அந் நிலைமைகள் வருமாறு
பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப்போல் ஆக்கிக்கொள்வார்கள்
அமானிதத்தைத் தம் பங்கிற்கு கிடைத்த பொருளாக ஆக்கிக்கொள்வார்கள்
ஸகாத்தைக் கொடுக்க மாட்டார்கள் (கொடுப்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும்)
மார்க்கக் கல்வியை உலக இலாபத்திற்காகக் கற்பார்கள.(பதவிக்காகவும் பொருளுக்காகவும்)
கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான்.
தாயை வேதனைப்படுத்துவான்.
நண்பனை அனைத்து விடயங்களிலும் நெருக்கமாக்கிக்கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவான்..
பள்ளிவாசல்களில் உலகப் பேச்சுக்கள் அதிகமாகி விடும்.
பாவச் செயல்களில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவான்
இழிநிலையானவன் முக்கியமானவனாகக் கருதப்படுவான்
ஆடாவடித்தனத்திற்குப் பயந்து அந்த மனிதனுக்கு மரியாதை செய்வார்கள்
ஆடல், பாடல்களில் ஈடுபடும் பெண்கள், இசைக்கருவிகள் அதிகமாகிவிடும்.
பலவகையான மதுபானங்கள் அருந்தப்படும்.
காலத்தால் பிந்தியவர்கள் முந்தைய சமுதாயத்தினரைப் பழிப்பார்கள.
(தொகுப்பு – எம்.எம்.ஏ.ஸமட்)