சாட்சியை அச்சுறுத்தியோரைக் கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு

298

கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கொன்றின் சாட்சியை அச்சுறுத்திய கிளிநொச்சி கிராம அபிவிருத்திச் சங்கம் ஒன்றின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை உடன் கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நேற்று புதன்கிழமை கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பிறப்பித்துள்ளார்.

பெண் ஒருவரை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2 சந்தேகநபர்கள் மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் என நான்கு சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மன்றுக்குச் சமூகமளித்த பாதிக்கப்பட்ட பெண், “தனது கிராமத்தின், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தியதாக” தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், உடனடியாக அந்த மூவரையும் கைதுசெய்து இன்று வியாழக்கிழமை மன்றில் முன்னிலைப்படுத்தமாறு உத்தரவிட்டதுடன், “நீதிமன்ற வழக்கில் யாரும் தலையிடக்கூடாது எனவும் அவ்வாறு தலையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்தார்.cot

SHARE