ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் கம்பீர் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் வார்னர், தவான் களமிறங்கினர். இருவரும் மந்தமான தொடக்கம் கொடுத்த நிலையில், வார்னர் 28 ஓட்டங்களிலும், தவான் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்டிய ஹென்றியூக்ஸ் 21 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஹொடா தன் பங்கிற்கு 13 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஓட்டமுறையில் வெளியேற்றப்பட்டார்.
இதன் பின்னர் நிதான ஆட்டத்தை தொடங்கிய யுவராஜ் சிங் அணிக்காக ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்தார். அவர் 30 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஐதராபாத்அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் சேர்த்தது.
கொல்கத்தா அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மொர்கல், ஹொல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய உத்தப்ப மற்றும் காம்பீர் ஆகியோர் நல்ல துவக்கத்தை தர முடிவு செய்து ஆடினர். உத்தப்பா 7 பந்துகளை சந்தித்து 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கம்பீருடன் ஜோடி சேர்ந்த மூன்ரோ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே கட்டிங்க் பந்துவீச்சில் 28 ஓட்டங்கள் எடுத்திருந்த கம்பீர் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த பாண்டே தனது அதிரடி ஆட்டத்தால் அணியை சரிவில்இருந்து மீட்டார்.
28 பந்துகள் சந்தித்த பாண்டே 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள்குவித்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து வெளியேற கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. இதனால் ஐதராபாத் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.