வடமாகாணசபையின் முதலமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது. த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தைப் பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணசபையின் உறுப்பினர்களான லிங்கநாதன் உள்ளிட்ட சிலரும் தாண்டிக்குளத்தில் இவ்பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கவேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கின்றனர்.
தமிழர் பிரதேசத்தில் இவ்வர்த்தக மையம் அமைக்கப்படவேண்டுமென்பதில் இவர்கள் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதையே அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது. உண்ணாவிரதத்தினை மேற்கொள்ளும் சுமார் 75வர்த்தகர்களின் கருத்தின்படி, தாண்டிக்குளத்தில் தான் இவ்வர்த்தக மையம் அமைக்கப்படவேண்டும் எனக்கூறுகின்றனர். இவர்கள் அனைவரும் கிராமப்புறங்களை அபிவிருத்தியடையச்செய்யவேண்டும் என்பதைவிடுத்து, நகர்ப்புறங்களை அபிவிருத்தி செய்தால்தான் கிராமப்புறங்கள் வளர்ச்சியடையும் என்கின்ற அடிப்படையில் கருத்துத்தெரிவிக்கின்றனர். இதற்கெதிராக போராட்டங்களை தாம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக இவ்வர்த்தக சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றார்கள். இவ்வுண்ணாவிரதத்தின்போது பதிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை இங்கே காணலாம்.
வடமாகாண சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய கருத்து.
பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைக்கப்படுவது என்பது உறுதி. ஒருசில அரசியல்வாதிகள் இதனைக் குழப்பும் நோக்கில் தாண்டிக்குளத்தில் அமைக்கவேண்டும் என்கின்றனர். பெரும்பான்மையான பாராளுமன்ற மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், மஸ்தான், அமைச்சர் சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் உள்ளிட்ட சிலர் இவ்வர்த்தக மையத்தினைத் தாண்டிக்குளத்தில் அமைக்கவேண்டும் என்கின்றனர். இவ்விடயத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் பின்னணியும் இருப்பதாக அறிகிறோம். இந்த வர்த்தக மையத்தின் மூலம் எதிர்காலத்தில் மக்கள் பயன்பெறக்கூடியதாகவிருக்கவேண்டும். இதனைவிடுத்து கட்சியின் அரசியலை வளர்ப்பதற்காகவும், மக்களின் நலனில் ஏதோ அக்கறையோடு செயற்படுகிறோம் என்பதைக்காட்டவும் ஒருசில வர்த்தகர்களை இணைத்துக்கொண்டு வடமாகாணசபைக்கெதிராக உண்ணாவிரதப்போராட்டத்தினை நடாத்துவதென்பது தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்பதை சிங்கள தேசத்தினர் மத்தியில் வெளிச்சம்போட்டுக்காட்டும் ஒரு விடயமாகவே அமையப்பெறுகிறது. தமிழ் மக்களும், வர்த்தகர்களும், அரசியல்வாதிகளும் ஒன்றினைச் சிந்திக்கவேண்டும். எமது எதிர்கால சந்ததியினரை உள்வாங்கிக்கொண்டு இந்த கிராமிய வர்த்தக மையமானது பொதுமக்கள் மத்தியில் நன்மை பயக்கும் வகையில் அமையப்பெறவேண்டும். தமது சுயநல அரசியலுக்காக தாண்டிக்குளத்தில் இவ்வர்த்தக மையம் அமையப்பெறுமானால் அது தமிழ் மக்களது அபிவிருத்திப்பாதையில் பாரிய பின்னடைவினைத் தோற்றுவிக்கும். ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த வர்த்தக மையத்தினை தமிழர் பிரதேசத்தில் அமைக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.