மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், போலியான முகவரியை அளித்து சிம் அட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக, தனிப் படையினர் தூத்துக்குடியில் திங்கட்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கடந்த மாதம் 24 ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள டி. மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் பிடிக்க முயன்றபோது தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தனிப்படையைச் சேர்ந்த ஓர் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் திங்கட்கிழமை தூத்துக்குடி வந்தனர்.
போலீஸார் கைது செய்துள்ள ராம்குமார் பயன்படுத்திய செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு சிம் அட்டை தூத்துக்குடி முகவரியில் பெறப்பட்டதாம்.
அதன் அடிப்படையில், அந்த முகவரிக்குச் சென்று தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், அந்த முகவரி போலியானது எனத் தெரிய வந்ததாம்.
மேலும், சிலரிடம் விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீஸார், சென்னை புறப்பட்டுச் சென்றனர்.