15 வகையான அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு

250

சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு, பால்மா உள்ளிட்ட 15 வகையான அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரசை உபகுழு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போது இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கான அத்தியவசியப் பொருட்களை வழங்குதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஒரு பண்டம் உற்பத்தி செய்யப்பட்டது முதல் நுகர்வோரைச் சென்றடையும் வரை பெருமளவிலான இடைத்தரகர்கள் காணப்படுகின்றமை பண்டங்களின் விலைகள் உயர்வடைவதற்கு காரணமாயமைந்துள்ளதுடன் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாத்து இது தொடர்பில் முறையான ஒரு வேலைத்திட்டத்தைப் பின்பற்றுதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வரி அதிகரிப்பினைக் காரணம் காட்டி வரி அறவிடப்படாத பொருட்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் முயற்சிகள் தொடர்பில் கண்டறிவதற்கு பொலிஸ், நுகர்வோர் அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இதன் போது ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறான முயற்சிகள் பற்றிய சுற்றிவலைப்புக்களை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களின் சேவையினை நாடளாவிய ரீதியில் மிகவும் செயற்திறனுடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உலகசந்தையின் நிலைமைகள் மற்றும் இயற்கை காரணங்கள் போன்ற பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஏதுவாயமையும் காரணிகள் தொடர்பாக நுகர்வோருக்கு விளக்கமளிக்கும் ஓர் ஒழுங்கு முறை காணப்படாமையினால் சிக்கலான நிலைமை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை உத்தியோகத்தர்களிடம் எடுத்துரைத்தார்.

உள்நாட்டுக் கைத்தொழிலையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களையும் பலப்படுத்தி தன்னிறைவுப் பொருளாதாரத்தினைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புதல் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகவுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆயினும் உள்நாட்டில் உற்பத்திசெய்ய முடியுமான உற்பத்திகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவ் உற்பத்தியாளர்களைப் பலப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கொள்கைகளைப் பின்பற்றுதல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான மாற்று உற்பத்திகளை மேற்கொள்ள முடியுமான உள்நாட்டுக் கைத்தொழில்களை இனங்கண்டு அவற்றை பலப்படுத்துதல் தொடர்பாகவும் சந்தையில் அறிமுகம் செய்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, டப்.டீ.ஜே.செனவிரத்ன, ரிஷாட் பதுர்தீன், பீ.ஹெரிசன், மலிக் சமரவிக்கிரம, துமிந்த திசாநாயக்க ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2016-07- 12

108-1140x957

SHARE