கூலி வேலை செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ ஜீவனாம்சம் வழங்குவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜன். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீரங்க சுபத்ரா என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தான் வசிப்பதற்கு ஒரு வீடும், ஜீவனாம்சமும் கோரி கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்க சுபத்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதை விசாரித்த நீதிமன்றம், வீட்டு வாடகைக்கு மாதம் ரூ.10 ஆயிரம், ஜீவனாம்சமாக மாதம் ரூ.10 ஆயிரம், இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க செல்வராஜனுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் செல்வராஜன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இழப்பீடு தொகையை ரூ.25 ஆயிரமாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வீட்டு வாடகைத் தொகை செலுத்த தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.
இதையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வராஜன் மேல்முறையிடு செய்திருந்தார். அதில், வேலை இல்லாத காரணத்தால் எனக்கு வருமானம் இல்லை. எனவே இவர்கள் கோரியுள்ள தொகையை வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் செய்கையால் அவரது மனைவி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே இதுவும் குடும்ப வன்முறையின் கீழ் அடங்கும். மனுதாரர் வேலையில்லாமல் இருப்பதாக கூறியுள்ளதற்கு எவ்வித ஆதாரமும் சமர்பிக்கவில்லை.
மனைவியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கூலி வேலை செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ ஜீவனாம்சம் வழங்குவதில் தவறில்லை என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.