சாலாவ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

262

malcolm ranjith cardinal

சாலாவ மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியுள்ளார்.

கொஸ்கம, சாலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தில் வீடுகள் மற்றும் கடைகள் பாரியளவில் சேதமடைந்திருந்தன.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித கதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

அவர் மேலும் கோருகையில்,

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இடம்பெற்ற விபத்தினால் அணிந்திருந்த ஆடைகளுடன் வெளியேறிய பிரதேச மக்கள் இன்று வரையிலும் எதிர்பார்ப்பு இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.

தமது உழைப்பில் உருவாக்கிய வீடுகள் கடைகள் அவற்றில் காணப்பட்ட பொருட்கள் அனைத்துமே அழிவடைந்துள்ளன. இந்த விபத்திற்கு அந்தப் பகுதி மக்கள் பொறுப்புதாரிகள் அல்ல.

விபத்தின் போது குறித்த மக்களுக்கு தேவையான உணவு குடிநீர் வழங்கப்பட்ட போதிலும் வீடுகளுக்கு அருகாமையில் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைமையை தனிப்பட்ட ரீதியில் நான் நேரில் பார்வையிட்டேன்.

வீடுகள் கடைகள் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதியளித்த போதிலும், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்புக்கள் சட்ட நியதிகளுக்கு வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

உதவிகளை வழங்க அனுமதி பெற்றுக்கொள்ள காரியாலயத்திற்கு காரியாலயம் கோவைகள் நகர்கின்றன. மக்கள் மழையிலும் வெயிலிலும் இவ்வாறு நெருக்கடியான நிலைமைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

நிறுவனக் கோவை சட்ட விதிகள் போன்றவற்றை புறந்தள்ளி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கி அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மிகவும் அன்புடன் கோரிக்கை விடுப்பதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE