12.07.2016 அன்று வடமராட்சியையும் தென்மரட்சியையும் இணைக்கும் வறணி திராலி இணைப்பு வீதியின் புனரமைப்பு வேலைகள் சம்பிரதாய பூர்வமாக வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த நிகழ்விற்கு வடமாகாண சபையின் எதிர்கட்சித்தலைவர் தவராசா அவர்களும் வீதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகம் அவர்களும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பெலிசியன் அவர்களும் உதவி பிரதேச செயலாளர் அவர்களும் முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் அவர்களும் கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமய தலைவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு கலந்துகொண்டனர்.
கடந்த வருடம் வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரினால் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் 38பேருக்கும் 6 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது அதற்கமைவாக குறித்த வறணி – திராலி வீதியானது வடமாகாண சபை உறுப்பினர் அகிலதாஸ் அவர்களினால் முன்னுரிமைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் இவ் வீதி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அவ்வீதியில் அமைந்துள்ள தில்லையம்பலப்பில்ளையார் கோவிலின் தர்மகர்தாக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில்வரை வீதியை புனரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக மேலும் 2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு மொத்தமாக 8 மில்லியன் ரூபாய்களுக்கான வேலை நடைபெற இருக்கின்றது. இவ்வீதியானது 4.5 kmதூரமுடையது இதில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக்கொண்டு 1.5 km வீதி புனரமைக்கப்படவுள்ளது.
அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஒதுக்கப்படுகின்ற நிதிகள் பிரயோசனமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் அவற்றைக்கொண்டு நீண்டதூரத்திற்கு தற்காலிகமாக புனரமைப்பதை விட குறுகிய தூரமாக இருந்தாலும் நீண்டகாலத்திற்கு பயனளிக்ககூடிய வகையில் தரமாக புனரமைக்கப்பட வேண்டுமென்ற பணிப்புரையை வழங்கியிருகின்றார்.
மேலும் மீதமாக இருக்கின்ற 3 km வீதி புனரமைப்பதற்கான நடவடிக்கை வருகின்ற வருடம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இக்கோரிக்கையை அமைச்சர் அவர்களிடம் அந்நிகழ்வில் கலந்துகொண்ட 92 வயது நிரம்பிய முதியவர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்வருகின்ற வருடம் I-ROAD Project, REACH Project போன்ற திட்டங்கள் வீதி தொடர்பாக வரவிருப்பதாகவும் அவ்வாறு அத்திட்டம் ஆரம்பிக்கப்ப்படுமாயின் இரண்டு வருடத்தினுள் வீதி தொடர்பாக இருகின்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் ஆகவே முன்னுரிமை அடிப்படையில் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்கின்ற வீதிகள் புனரமைக்கப்படும் போது ஏனைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.