மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் நடைபெற்றுவரும்அத்துமீறிய சட்டவிரோத குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை சிலர் உடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கடந்த ஒரு வருடகலமாக நடைபெற்றுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது.
அந்தப்பகுதியில் சிங்கள மக்கள் வீடுகளை அமைத்து வருகின்றனர். குறித்த பிரதேசத்திற்கு கடந்த மே மாதம் நேரடி விஜயத்தினை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் ஆகியோர் அங்கு அத்துமீறிய சட்டவிரோத சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதை பார்வையிட்டனர்.
அத்துடன், அந்தப்பகுதியில் குடியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த விகாராதிபதி மற்றும் குடியேற்றவாசிகளுடன் பேசியிருந்தனர்.
இந்நிலையில், குறித்தப்பகுதியில், நடைபெறுவது சட்டவிரோத குடியேற்றம் எனவும், அதனை உடனடியாக தடுத்துநிறுத்துவதாகவும் உறுதிமொழி வழங்கியிருந்தனர்.
அரசாங்க அதிபரினால் உறுதிமொழி வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தடுத்து நிறுத்தப்படுவதற்கு பதிலாக அங்கு சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மிக வேகமாக வீடுகள் கட்டப்பட்டு வருவதுடன், அங்குள்ள மக்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மாங்கன்றுகள் என்பன வழங்கப்பட்டும் வருகின்றன.
இதற்காக இந்தப்பகுதியில் மிகப்பெரிய காடழிப்பு நடைபெற்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தை தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொலிஸாரைக் கொண்டு தடுத்து நிறுத்தவேண்டிய அரசாங்க அதிபர், அதனை வேடிக்கை பார்க்கின்றார்.
அதன் விளைவாகவே, இன்று அந்தப்பகுதியில் சிங்கள வீட்டுத்திட்டம் உருவாக காரணம் என பண்னையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதே நேரம் குறித்த பகுதியில் சிங்கள மக்களினால் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் சில இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இருந்தும் இதனை தமிழர்கள் தான் மேற்கொண்டார்கள். என தங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டக்களை முன்வைத்து வன்முறைகளை ஏற்படுத்த கூடுமென தமிழ் பண்னையாளர்கள் பலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் இன முறுகல் ஒன்று ஏற்படுமாக இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்க அதிபர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் அரசியல்வாதிகள் போன்றவர்களே ஏற்கவேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிப்பதாக பண்னையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.