ஜேர்மன் நாட்டு குழந்தைக்கு இலங்கையில் நடந்த விபரீதம்.!

256

01-1441093670-baby-6000

வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற 1 வயதும் 10 மாதமும் ஆன குழந்தையே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த குழந்தையும், அவரது பெற்றோரும் கடந்த வாரம் அளவில் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இவர்கள் வென்னப்புவ பிரதேசத்தின் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று பெற்றோர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது குறித்த குழந்தை தரையில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பாதுகாப்பற்ற மின்சார பொருளினை குழந்தை தொட்டிருக்கலாம் எனவும் இதன்மூலம் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குழந்தையின் சடலம் தங்கொட்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE