சாதிக்கும் சந்ததி – 19 இல் தொண்ணூறு மாணவர்கள் உள்ளீர்ப்பு!

268

 

மாணவர் நலனோம்பலை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் “சாதிக்கும் சந்திதி” செயற்றிட்டமானது அதன் 19ஆம் கட்டத்தில் தொண்ணூறு மாணவர்களை உள்ளீர்த்துள்ளது.
af4b94f5-9894-4f37-838e-0f5a24b961e4
தரம் – 5 புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களை வலுவூட்டும் நோக்கோல் முன்னெடுக்கப்பட்ட 19ஆம் கட்டத்தில் பதினாறு பாடசாலைகளை சேர்ந்த தொண்ணூறு மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறித்த செயற்பாட்டுக்கான பங்களிப்பினை அவுத்திரேலியா கனடா மற்றும் இலண்டனில் வசிக்கும் புலம்பெயர் உறவுகள் எண்மர் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகவும் பாடசாலை இடைவிலகலை முற்றாக நீக்கும் வகையிலும் சாதிக்கும் சந்திதி செயற்றிட்டமானது முல்லைத்தீவில் கடந்த ஈராண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச்செயற்றிட்டமானது அண்மையில் உள்வாங்கப்பட்ட தொண்ணூறு மாணவர்களுடன் மொத்தமாக 1157 மாணவர்களை கடந்த பத்தொன்பது கட்டங்களில் உள்வாங்கிப்பயணிக்கும் ஈழத்தின் மாணவர் நலனோம்பல் செயற்றிட்டமாக காணப்படுகிறது.
பொருண்மிய நலிவுற்ற மாணவர்கட்கான பொத்தகப்பை, குறிப்புநூல்கள், மூடிய காலணி, சீருடை, மிதிவண்டிகள் என மாணவர் நலனோம்பல் முன்னெடுப்புகளை கடந்த கட்டங்கள் ஊடாக மேற்கொண்ட இச்செயற்றிட்டம் அதன் பத்தொன்பதாம் கட்டத்தில் கடந்த ஆண்டு புலமைப்பரிசில் தேர்வில் வெட்டுப்புள்ளியை விட கூடுதல் புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவித்துள்ளது.
இச்செயற்றிட்டம் தொடர்பில் ரவிகரன் அவர்கள் தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்து வாழும் ஈழ உறவுகள் எண்மரின் பணப்பங்களிப்பில் சாதிக்கும் சந்ததியின் பத்தொன்பதாம் கட்டம் நிறைவுபெற்றுள்ளது.
அவுத்திரேலியாவில் வசிக்கும் திரு.யோகவரன் யோகேசுவரன், திரு. செந்தூரன் சோதிலிங்கம், திரு.விக்னாகரன் கரிகரன், திரு.குபேரன், திருமதி சைலி, திருமதி கணேசராசா சுதந்திரதேவி ஆகியோரும் கனடாவில் வசிக்கும் திரு. யோகரட்ணம் செகதீஸ், திரு. யோகரட்ணம் செயகாந் ஆகியோரும் இலண்டனில் வசிக்கும் திரு. சுந்தரவதனன் மகாலிங்கம் அவர்களதும் பங்களிப்பின் ஊடாகவே இக்கட்டம் சாத்தியமாகி உள்ளது.
இதன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமாரசாமி வித்தியாலயம், வள்ளிபுனம் கனிட்ட உயர்தர வித்தியாலயம், இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம், குமுளமுனை மகா வித்தியாலயம், ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் பாடசாலை, முத்துவிநாயகர் தமிழ் வித்தியாலயம், கற்சிலைமடு அ.த.க.பாடசாலை, செம்மலை மகா வித்தியாலயம், சிலாவத்தை தமிழ் வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயம், விசுவநாதர் ஆரம்ப பாடசாலை, வற்றாப்பளை மகா வித்தியாலயம், முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் ஆகிய பதினாறு பாடசாலைகளைச்சேர்ந்த தொண்ணூறு மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
உள்வாங்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கடந்த ஆண்டின் தரம்-5 புலமைப்பரிசில் தேர்வில் வெட்டுப்புள்ளியை தாண்டிய பெறுபேற்றைப்பெற்ற மாணவர்களாவர்.
ஒவ்வொரு மாணவருக்கும் தலா மூவாயிரம் உரூபாயினை நேரடியாக அவர்கள் பயிலும் பாடசாலைக்குச்சென்று வழங்கியுள்ளேன். புலம்பெயர் உறவுகள் ஊடாகவும் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகள் ஊடாகவும் இப்படியான கல்வி வலுவூட்டல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளமுடிகிறது. இயலுமானவரையில் ஊக்குவிக்கப்படவேண்டிய மாணவர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் தொடர்ச்சியான கல்வி முன்னெடுப்பை உறுதிசெய்யும் வகையில் இப்படியான உதவிகளை செய்துவருகிறோம். தொடர்ந்தும் இம்முன்னெடுப்புகளோடு இணைந்திருப்போம். என்று தெரிவித்தார்.
SHARE