ஜனாதிபதியும் ஆளுநரும் உள்ளபோதே காணி அபகரிப்புக்கள் அரங்கேறின

256

625.500.560.350.160.300.053.800.900.160.90

மட்டக்களப்பு மண்ணில் ஜனாதிபதியும் கிழக்கு மாகாண ஆளுநரும் உள்ளபோதே பொரும்பான்மை இனத்தவரால் எமது மாவட்டத்தின் எல்லை புறங்களில் காணிஅபகரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

நல்லாட்சி அரசில் எமது மக்கள் சந்தேகம் கொள்ளாத அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.

பெரியகல்லாறு மத்தியகல்லூரி தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவும், ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் வித்தியாலய அதிபர் எஸ்.செல்வராசா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தொழில்நுட்ப அய்வு கூடங்கள் சிறந்த தொழிர்வல்லுனர்களை உருவாக்க கூடிய அளவிற்கு பயன்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் இவ்வாறான தொழில்நுட்ப கல்வியினை கற்பதற்கு மாணவர்கள் தலைநகரங்களை நோக்கி சென்றனர்.

ஆனால் இன்று இந்த வசதி எமது காலடிக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதற்காக எங்களிடம் வளமான ஆசிரியர்கள் இருக்கின்றனர். எதிர் காலத்தில் இக்கல்வியைக் கற்று சிறந்த இடத்தினை பிடிக்க வேண்டும்.

இருந்தும் சில பாடசாலைகளில் குறைப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது இப்பாடசாலை கல்வியில் மாத்திரமல்ல விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றது.

கடின பந்து விளையாட்டில் முன்னணியில் இருக்கின்றது இதனை பயிற்றுவிக்க உடற்கல்வி ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாகாண கல்வி அமைச்சர் நிவர்த்தி செய்ய வேண்டும்.

மக்கள் நினைப்பதைப் போன்று ஆளுங்கட்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்லை எதிர்கட்சியில்தான் இருக்கின்றது. நாங்கள் எமது மக்களுக்கான தீர்வினை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் அவர்களிடம் சலுகைகளை கேட்க முடியாது உரிமைகளைத்தான் கேட்க வேண்டும். மாகாண சபையினை பொறுத்தளவில் அபிவிருத்திக்கான நிதிகளை விகிதாசார அடிப்படையில் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். இதன் அடிப்படையில் பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

மட்டக்களப்பில் ஜனாதிபதியும், ஆளுநரும் மேடையில் இருக்கும் போது கூட எமது மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் எமது மக்களின் காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படித்துக் கொண்டு இருக்கின்றனர்.

எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஆரம்பித்தது கூட காணியில்தான். இவ்வாறான திட்டங்களை ஏன் இந்த நல்லாட்சி அரசு முன்னெடுக்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட தயங்குகின்றனர்.

கடந்தகால அரசில் நம்பிக்கை இல்லாமல் அக்காலங்களில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வேண்டி செல்லும் நிலை ஏற்பட்டது.

தற்போதுகூட உங்களுடன் நல்ல எண்ண அடிப்படையில் நாங்கள் அகிம்சை வழியில் உங்களுடன் சேர்ந்து நிற்கின்றோம். இதன் அடிப்படையில்தான் எமது தலைவர்கள் தங்களிடம் தீர்வினை தாருங்கள் என வேண்டி நிற்கின்றனர்.

ஆனால் இதற்கு சில அரசியல் தலைவர்கள் தடையாக உள்ளதையும் எங்களால் அவதானிக்க முடிக்கின்றது. தமிழ் மக்களை வைத்து பேரினவாத அரசியல் நடாத்துவதற்காக இதனை மேற்கொள்கின்றனர். இருந்தும் அந்தனையையும் எமது தலைவர்கள் எமது மக்களின் எதிர்கால நன்மை கருதி பொறுமையாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.

SHARE