யாழ் பல்கலைக்கழகத்தில் புலனாய்வாளர்கள் கண்காணிப்பு

263

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே வவுனியா வளாகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் மோதல் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைமையிலான உயர்மட்ட விசாரணைகள் மறைமுகமான முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மாணவர் விடுதியை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வழமையாக தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் இடம்பெறுகின்ற போதிலும், தமிழ் மாணவர்களால் மேளதாள கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கள மாணவர்கள் தமது கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர்.

சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இரண்டு மாணவ குழுக்களுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது பொல்லுகள், தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது சிங்கள மாணவர்களால் தமிழ் மாணவர்கள் மோசமாகத் தாக்கப்பட்டனர்.

இதனால் அச்சமடைந்த ஏனைய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விடடு தப்பிச் சென்றனர். அதேவேளை சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் மாணவர்கள் அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிங்கள, தமிழ் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்து பொலிசார் மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த மோதலில் காயமடைந்த 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது

மோதல்களின் போது விஞ்ஞானபீட கட்டடமொன்றும் அடித்து நொருக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.jaffna

SHARE