குறிப்பாக வடகிழக்கு ஊடகவியலாளர்களைக் குறிவைத்து அரசபுலனாய்வாளர்கள் ஊடகவன்முறைகளையும், ஊடகவியலாளர்கள் இடையே மோதல்களையும் தோற்றுவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளர்களை அரசாங்கம் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு திட்டமாக இவ் அரசாங்கம் தமது நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துள்ளது. யுத்தகாலத்தில் கடமையாற்றிய ஊடகவியலாளர்களுக்கும், தற்போது கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஊடகவியாளர்களுக்குமிடையே நிறையவேறுபாடுகள் இருக்கின்றது.
குறிப்பாக 2009ம் ஆண்டின் பின்னர் ஊடகத்துறைக்குள் நுழைந்தவர்கள் பெரும்பாலானோர் இலத்திரணியல் ஊடகங்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இதனூடாக அரசாங்கம் தகவல் அறிந்துகொள்ளும் தொழில்நூட்பத்தின் ஊடாக குறித்த ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு மட்டும் பெருந்தொகை பணங்களை வழங்கி தமது உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் வழிவகுத்துள்ளார்கள். இதனால் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை அதிகரித்துள்ளது.
ஊடகத்துறையில் அனுபவம் இல்லாதவர்களும் ஒரு நிகழ்வு நடைபெறுகின்ற இடத்தில் தகவல்களையும், அதனை யார் முன்னின்று செய்கின்றார்கள் என்ற விடயத்தினையும் புலனாய்வாளர்களுக்கு கொடுக்கின்றனர். இதனை ஆராய்ந்து இதனுடைய பின்விளைவுகள் என்னவென்று நிதானித்து எழுதும் ஊடகவியலாளர்கள் மிகக் குறைவு. ஆளுக்கொரு இணையத்தளத்தை ஆரம்பித்து முகநூல்களிலும், டூவிட்டர் போன்றவற்றிலும் நம்பத்தகாத செய்திகளை வெளியிட்டு ஊடகத்துறைக்கு அவப்பெயரை இவர்களைப் போன்றவர்கள் ஈட்டிக்கொடுக்கின்றனர்.
ஊடகம் என்பது மகாத்தான சேவைகளை மக்கள் மத்தியில் ஆற்றிவருவதொன்று. இந்தச் சேவையைக் கலங்கப்படுத்தும் வகையில் வடகிழக்குப் பகுதியினுள் புலனாய்வாளர்கள் செயற்படுவது வடகிழக்கில் இருக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு பெரும் பேரளிவை ஏற்படுத்துகின்ற விடயமாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், காணமல் போயுமுள்ளார்கள் என்பதும் தான் ஊடகவியலாளர் பற்றி அறிந்த செய்தி. ஆனால் இன்றோ தேசியம், சுயநிர்ணய உரிமை என்று எந்த ஊடகவியலாளர்கள் அதனை முன்னெடுத்திருந்தார்களோ, அல்லது ஒரு மாவட்டத்தில் எந்த ஊடகவியலாளர் திறமையாகச் செயற்படுகின்றாரோ அதனை மழுங்கடிக்கும் நோக்கில் இராணுவப் புலனாய்வாளர்களால் ஏவிவிடப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் பலர் செயற்பட்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக ஊடகவியலாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையிலேயே மோதல்கள் ஏற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இவ்வாறு செயற்படுகின்ற ஊடகவியலாளர்கள் தமிழ் ஊடகவியலாளர்களாகவே இருக்கின்றார்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. ஊடகத்துறையில் ஜாம்பவான்களாக இருந்த ஊடகவியலாளர்கள் பற்றி இவர்களுக்குத் தெரியாது. அந்தவரிசையில் தரக்கி என்று அழைக்கப்படும் டி.சிவராம் இவரே தமிழ் இலத்திரணியல் ஊடகத்தை இலங்கைக்கு முதல் முதல் கொண்டு வந்தார். இவரைப்போன்று பா.நடேசன், விமலராஜன், சுகிர்தரன், கனகரவி, சுப்பு, வேதநாயகம், ஜெயானந்தமூர்த்தி, தில்லை, இராதிகா, சந்திரப்பிரகாஸ், ஜேன், லசந்தவிக்கிரமசிங்க, அத்துலவாசன, இப்வேல்அத்வாஸ், இப்படி பல ஊடகவியலாளர்கள் இன்னும் இருக்கின்றார்கள். ஒருசிலர் பேர் குறிப்பிடப்பட்டவர்களில் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். இதுவரையிலும் கடத்தப்பட்டும், காணாமல் போயும், கொலை செய்யப்பட்டும் நாற்பத்திரண்டு ஊடகவியலாளர்களின் நிலை என்னவென்று அறியமுடியாமல் உள்ளது. அதற்கான விசாரணைகூட இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக இனப்படுகொலையை மூடிமறைப்பதற்கு வடபுல ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்காகவும் இந்த புலனாய்வு ஊடகங்கள் செயற்படுகின்றது. தேசியம், சுயநிர்ணய உ ரிமை என்ற கோற்பாடுடன் தமது ஊடகப் பணியைமேற்கொள்ளும் ஊடகவியலாளர்கள் இவ் புலானய்வு ஊடகவியலாளர்களை இனங்கண்டு செயற்படுவது சிறந்தது.
தமிழினத்தின் விடிவை நசுக்கும் செயற்பாட்டில் இவ் ஊடகவியலாளர்கள் செயற்படுவது மனம் வருத்தத்தக்க விடயம். ஊடகவியலாளர்கள் சுயமாக செயற்படுவதற்கு அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். குறிப்பாக இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை நடைபெறவில்லை என்றும் கூறிக்கொள்வதற்காகவே ஊடக உறவுப் பாலங்களையும், ஊடக நல்லிணக்கங்களையும் அரசாங்கம் திட்டமிட்டு கட்டவிட்டுள்ளது. இவ்வாறு புலனாய்வாளர்களுக்கு வக்கலத்து வேண்டும் ஊடகத்துறைச் சார்ந்தவர்கள் தனது சொந்தத் தாயைக் காட்டிக் கொடுப்பதற்கு சமனாகும்.
ஆகவே தமிழ் ஊடகவியலாளர்கள் விழிப்புனர்வுடன் தமிழ் மக்களின் விடுதலையை நோக்கிய பயணத்தில் இடையூறுகளை விளைவிக்காது தமிழ் மக்களுக்கான சிறப்புரிமையைப் பெற்று சுயகௌரவத்துடன் வாழ எமது ஊடகத்துறை சார்ந்த ஊடகவியலாளர்கள் செயற்பட்டால் அதுவும் தமிழினத்தின் விடுதலைக்கு உரமூட்டும் செயலாகும். ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது செயற்படுவது இவ் ஊடகத்துறைக்கு வலுவாக அமையும். இல்லையில் அது எம் ஊடகத்துறைக்கு சாவக்கேடாக வந்து அமையும்.
-நெற்றிப்பொறியன்-