மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்பந்தமாக விமானப்படையின் சட்டப்பணிப்பாளரிடம் விடயங்களை கேட்டறிந்த கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, எதிர்வரும் 25ஆம் திகதி இது சம்பந்தமாக விபரமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணமான மிக் விமான கொள்வனவு தொடர்பான மூல ஆவணங்களை சட்ட ரீதியாக எவருடைய பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தன.
அவை சரியான முறையில் வைக்கப்பட்டிருந்தமைக்கான பதிவு சாட்சியங்கள் இருக்கின்றதா?.விமானப்படையின் எந்த அதிகாரியின் பொறுப்பில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிந்து கொண்ட பின்னர், எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்த அறிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜயசுந்தர, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் ஆகியோர் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
2006ஆம் ஆண்டு நான்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை கூட ரத்துச் செய்யப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.