ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும். சிவசக்தி ஆனந்தன், பா.உ
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங்களையும், இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளனர்.
ஜனநாயகம் என்பது வெறுமனே புள்ளடி போடும் ஒரு விவகாரமல்ல. ஜனநாயகம் என்பது நடைமுறையில் அதற்கான மரபுகளையும், சம்பிரதாயங்களையும், பண்பாட்டையும், வாழ்க்கைமுறையையும் கொண்ட அன்றாட நடைமுறையோடு பின்னிப்பிணைந்த விடயமாகும்.
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற இழுபறி ஏற்பட்டபோது அதற்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணப்போவதாகக் கூறி வடமாகாணசபை உறுப்பினர்களையும், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்த ஒரு கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் கூட்டியிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் இந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜனநாயகரீதியில் முடிவை எட்டுவதாகக் கூறி அது முதலமைச்சரின் கையில் ஒப்படைக்கப்பட்டது. முதலமைச்சர் அவர்களும் சம்பந்தன் ஐயாவின் கருத்தினை ஏற்று, மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டறிந்தார். இதன் பிரகாரம் ஓமந்தையில் இது அமைவதே பொருத்தமானது என பெரும்பாலானவர்கள் வாக்களித்தனர். இது இத்துடன் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இதன் பின்னர் பாராளுமன்றக்குழு கூடி இந்தக் காணிகளைப் பார்வையிடுவதாகவும், ஓமந்தையிலேயே இதனை நிறுவுவதற்கும் முடிவெடுக்கப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சரை சந்தித்து நீங்களே இதற்கான முடிவை எடுங்கள் என்றும் கூறியிருந்தார்.
அதேசமயம், இன்று தாண்டிக்குளத்தைத் தெரிவு செய்துள்ள அமைச்சர் றிசாத் பதியூதீன், கடந்த 15.06.2010ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அன்றைய வடமாகாண ஆளுநராக இருந்த சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், நகரசபை தவிசாளர், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் இணைந்து ஓமந்தையைத் தெரிவு செய்தனர் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். ஆட்சி மாறியவுடன் கொள்கையை மாற்றுவது பதவி ஆசை பிடித்த அரசியல் வாதிகளுக்கு கைவந்தகலை. ஆனால் அன்றைய அந்த முடிவானது ஒரு நிபுணர்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அதனடிப்படையில் எடுக்கப்பட்டது.
இன்று எந்த காரணத்திற்காக மத்திய அமைச்சர்கள் இதனை எதிர்க்கிறார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. இது இவ்வாறு இருக்கத்தக்கதாக பிரதி அமைச்சர் அவர்கள் மீண்டும் ஒருமுறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவை கூட்டி இது விடயம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோருவதன் நோக்கமென்ன?
ஓமந்தை பிரதேசம் பேய்கள் உலாவும் இடம். அந்த இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க முடியாதென அமைச்சர் ஹரிசன் குறிப்பிட்டிருந்தார். அந்த மக்கள் தான் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்து ஹரிசனும் ஒரு அமைச்சராக இருப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை அமைச்சர் ஹரிசன் மறந்துவிடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கி, வடக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தை வேறு எங்காவது கொண்டுசெல்ல முயற்சிக்கின்றார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.
வடமாகாண மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடியவாறு இந்த சந்தை அமைய வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் இந்த சந்தையை மையமாக வைத்து அது தம்புள்ள போன்ற ஒரு நகரமாக வளரவேண்டும் என்ற தேவையையும் கவனத்திலெடுத்து, அதற்கான காணி மற்றும் தேவையான வளங்கள் அனைத்தும் ஓமந்தையில் உள்ளதென்பதையும் கவனத்தில் எடுத்து, இந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் ஆகியோர் முன்னெடுக்க வேண்டும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய வடமாகாண விவசாய சங்கங்கள் அனைத்தும் மற்றும் வடமாகாணத்தைச் சார்ந்த பொருளாதார நிபுணர்களும் யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் வல்லுனர்களும் இதற்கு சிறந்த இடம் ஓமந்தையே எனப் பரிந்துரை செய்துள்ளனர். இதற்குப் பின்னரும் இது தொடர்பான தேவையற்ற குடுமிப்பிடி சண்டை தொடர்வதை வடமாகாண பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ந.சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
