யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை பொறுப்புடன் செய்தி அறிக்கையிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டமைக்காக நன்றி பாராட்டுவதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சம்பவம் குறித்து அறிந்து கொண்ட உடனேயே ஜனாதிபதி சில அமைச்சர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.
உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவும் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.