கோட்டாபயவின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யத் திட்டம்

263

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்து அவரின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த நடவடிக்கைகள் தாமதமாவதற்கு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கிடையில் நிலவும் கடும் கருத்து முரண்பாடே காரணம் என பெயரைக் குறிப்பிட விரும்பாத அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ராஜபக்ச மன்றத்திற்காக அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, ரக்பி வீரர் வசீம் தாஜூடீன், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் படுகொலைகள் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களுக்காக கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் கோட்டாபயவை கைதுசெய்வதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட வருவதுடன், தமது எதிர்ப்பையும் மீறி கோட்டாபயவை கைது செய்தால் அரசாங்கத்திலிருந்த வெளியேற நேரிடும் என்றும் எச்சரித்து வருவதாகவும் பெயரைக் குறிப்பிட விரும்பாத முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இதனாலேயே பல ஆதாரங்கள் கிடைத்தும் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன கோட்டாபயவை கைதுசெய்வதை ஒத்திவைத்து வருவதாகவும் அந்த அமைச்சர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது இருக்கத் தீர்மானித்தால், அவருக்குப் பதிலாக கோட்டாபய ராஜபக்சவை நிறுத்தி ஆட்சியை கைப்பற்றலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தீர்மானித்திருப்பதாலேயே இவ்வாறு எதிர்ப்பை வெளியிடட வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் கூறினார்.

இதேவேளை 2006 ஆம் ஆண்டு நான்கு மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்த போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படுமானால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பிரஜாவுரிமையையும் இரத்துச் செய்ய முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த மிக் யுத்த விமானக் கொள்வனவுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரும், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை அரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Sri Lanka's former defense ministry chief Gotabhaya Rajapakse leaves the anti-graft commission office in Colombo on April 23, 2015, after giving a statement. A Sri Lankan magistrate remanded the youngest brother of former president Mahinda Rajapakse for "misappropriating" public funds, hours after the ex-leader accused his successor of a witch-hunt. AFP PHOTO/ LAKRUWAN WANNIARACHCHI

SHARE