அஜித்-விஜய் தமிழ் சினிமாவுக்கு ஏன் தேவை..?

239

மூத்தக் குடிகள் முதல் முந்தா நாள் கல்லூரியில் சேர்ந்த மாணவன் வரை, கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் அனைவரும் இவர்களில் ஒருவரையாவது ரசிப்பார்கள். அப்போ நடுநிலை நாட்டாமைகள்? உண்மையில் எனக்கு இவங்க ரெண்டு பேரையுமே பிடிக்காது என்பவர்களிடத்தில் தோண்டித் துருவி கேட்டால், ‘அவரோட டான்ஸ் மட்டும் பிடிக்கும், அவரோட மேனரிசம் மட்டும் பிடிக்கும்’ என முடிப்பார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு இவர்கள் கொண்டாடப்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விமர்சிக்கப்படவும் செய்கிறார்கள். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இவர்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு தேவை? Well, it’s just a Beginning.

(முன்குறிப்பு) அதற்காக கேப்டன் பாணியில் புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிக்கவோ, கலாரசிகன் பாணியில் கழுவி ஊற்றவோ போவதில்லை. இது ஒரு சாதாரண ரசிகனின் பார்வை. ரிலாக்ஸ் மக்களே…

தலைவன் இருக்கிறான்

தல – தளபதி சண்டை ஏதோ ஃபேஸ்புக்கிற்காகவே டிசைன் செய்யப்பட்ட மேட்டரல்ல. தியாகராஜ பாகவதர் – பி.யூ சின்னப்பா காலத்தில் தொடங்கிய பஞ்சாயத்து இது. அதன்பின் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜீத், தனுஷ் – சிம்பு (சிரிக்காதீங்க ஜி. ஒரு காலத்துல நிஜமாவே சிம்பு, தனுஷுக்கு போட்டியா இருந்தாரு) லேட்டஸ்ட்டாய் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி என டார்வினின் கொள்கையை கரெக்டாக கடைபிடித்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். அதில் இன்றைய இளைய தலைமுறையின் ஃபேவரைட் அஜீத் – விஜய்தான். இருவரும் ரசிகர்களை சமாதானப்படுத்தவாவது கதைத் தேர்வில் கவனம் செலுத்துகிறார்கள்.

இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் என கண்டமேனிக்கு கம்பு சுற்றுபவர்கள், இன்னொரு முட்டுச்சந்திற்கு போய் ராஜா – ரஹ்மான், மெஸ்ஸி, ரொனால்டோ, சாரு – ஜெமோ என தம் கட்டுவார்கள். நாம் எல்லாருமே யாரோ ஒருவரின் திறமையை சிலாகித்து சண்டை போடும் ரசிகர்கள்தான்.

கமர்ஷியல் கிங்குகள்:

பெண் உரிமைக்காக பொங்கித் தீர்க்கும் சமூகம்தான் புஷ்பா – புருஷன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தது. உண்மையில், லாஜிக் எல்லாம் தேவையில்ல. என் கவலையை ஒரு மூணு மணிநேரம் மறந்தா போதும் என்பதுதான் காமன்மேனின் மனநிலை. அதை கச்சிதமாக செய்யும் கலைஞர்கள் இவர்கள். இவர்களின் அடுத்த படத்திலும் பெரிய கதைமாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஹோம் கிரவுண்டில் செஞ்சுரி அடிச்சாலும் கெத்துதானே ப்ரோ!

காமெடி மட்டுமல்ல, கமர்ஷியலும் சீரியஸ் பிசினஸ்தான். காரணம், கமர்ஷியல் சினிமாவிற்கான டெம்ப்ளேட் குழந்தைக்கும் பரிச்சயம். கொஞ்சம் பிசிறினாலும், ‘இதைதான் ரெண்டு வருஷம் முன்னால அவர் பண்ணிட்டாரே…’ என ஸ்டேட்டஸ் போட்டு காலி செய்துவிடுவார்கள். கத்தி மேல் நடக்கும் வித்தையை இம்மி பிசகாமல் திரும்பத் திரும்ப கச்சிதமாக செய்வதற்கே இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

காசேதான் கடவுளடா!

லட்சங்களில் இருந்த சினிமா வசூலை கோடிகளுக்கு கொண்டு சென்றார் ரஜினி. அதை இன்னும் பல மடங்காக உயர்த்தினார்கள் இருவரும். திருட்டி டிவிடி, ஆன்லைன் பைரசி, ஆங்கில சினிமாக்களின் தாக்கம் ஆகியவற்றைத் தாண்டி, பல கோடி ரூபாய் வணிகம் செய்வது சாதாரணமல்ல. அந்த வகையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் டார்லிங் டம்பக்கு தல – தளபதிதான் என்பதை அவர்களின் பட பட்ஜெட் சொல்லும். தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் தொடங்கி, சமோசா விற்பவர்கள் வரைக்கும் பேக்கேஜ் லாபம் அளிக்கும் பலசாலிகள் இவர்கள்.

இதையும் தாண்டி, இவர்களால்தான் தமிழ் சினிமா சீரழிகிறது, கலைப் படைப்புகள் தடைபடுகிறது என்பவர்களின் கவனத்திற்கு – தமிழ் சினிமாவை உலகறியச் செய்தது கமர்ஷியல் சினிமாக்களின் ரீச்தான். இன்னும் சிம்பிளாக சொன்னால், விசாரணைக்கும், காக்கா முட்டைக்கும் பின்னால் இருப்பது வேலை இல்லா பட்டதாரியின் லாபம்தான்.

ட்ரெண்ட்செட்டர்கள்:

1995-க்கு பிறகு தமிழ் சினிமாவின் போக்கை தீர்மானிப்பது இவர்கள் இருவரும்தான். இரு தசாப்தங்களாய் இவர்கள்தான் ட்ரெண்ட்செட்டர்ஸ். கவனித்துப் பார்த்தால் 1995-ல் இருந்து 2001 வரை காதல் பீவரில் தள்ளாடியது கோலிவுட். காரணம், பூவே உனக்காகவும், காதல் கோட்டையும் காட்டியப் பாதை. அதுவே பின்னாளில் லவ் டுடே, காதலுக்கு மரியாதை, உல்லாசம், காதல் மன்னன் என வளர்ந்து குஷி, பிரியமானவளே, வாலி, அமர்க்களம் என பரிணாமித்தது.

தீனாவும், திருமலையும் தொடங்கி வைத்த ஆக்‌ஷன் பாதைதானே தமிழ் சினிமாவை பரபர பட்டாசாக வெடிக்க வைத்தது. கில்லி, போக்கிரி, வரலாறு, பில்லா என வசூல் ரீதியாக அடுத்த கட்டத்திற்கு அடிபோட்டது தமிழ் சினிமா. மங்காத்தா, துப்பாக்கி ஆகியவை கோலிவுட் வசூலை லாங் ஜம்ப்பில் முன்னேற்றி அழைத்துச் சென்றன.

சினிமாவில் மட்டுமல்ல, யூத் கல்ச்சரிலும் இவர்கள்தான் இன்றும் ட்ரெண்ட்செட்டர்ஸ். சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலாகட்டும், கூகுள் கூகுள் குரலாகட்டும், இளசுகளின் இதயத்துடிப்பை பச்சக்கென கேட்ச் செய்யும் கில்லிகள். இவர்கள் ரைம்ஸ் சொன்னால் கூட தமிழகம் ஹஸ்கி வாய்ஸில் முணுமுணுக்கிறது.

வேற லெவல் கமிட்மென்ட்

ஆயிற்று 25 ஆண்டுகள் இருவரும் சினிமாவிற்கு வந்து. தொட்டாயிற்று நூறு கோடி வசூலை. ஐம்பது பிளஸ் படங்கள் கணக்கில். ஆனால் இதுவரை கால்ஷீட் சொதப்பியதாக, ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ச்சை கிளப்பியதாக ஒரு தகவல் வந்ததில்லை. நேற்று வந்த பிள்ளைப் பூச்சி எல்லாம் கொடுக்கு வளர்த்து தயாரிப்பாளர்களின், படைப்பாளிகளின் தலையில் கொட்டும்போது (சத்தியமாக யாரையும் குறிப்பிட்டு சொல்லும் நோக்கமல்ல என சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை) பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்களாய் நடந்துகொள்கிறார்கள் இருவரும். ரசிகர்களை மோட்டிவேட் செய்யவும் இருவரும் தவறுவதில்லை. அந்த வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இவர்கள் ரோல்மாடல்கள்.

சுருங்கச் சொன்னால் தல – தளபதி இன்றி இல்லை தமிழ் சினிமா.

SHARE