நான் ஒரு துரோகி கிடையாது: பதிலடி கொடுத்த முரளிதரன்

282

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

இந்த தொடருக்கு அவுஸ்திரேலிய அணி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தனது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் முரளிதரன், முதல் டெஸ்ட் நடக்கவிருக்கும் பல்லேகெலே மைதானத்திற்கு அவுஸ்திரேலியா வீரர்களுடன் சென்று பயிற்சிக்கான ஆடுகளத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில், முரளிதரன் பலவந்தமான முறையில் மைதானத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பந்து வீச்சு பாணி தொடர்பில் சர்வதேச ரீதியாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது கிரிக்கெட் வாரியமும் இலங்கை மக்களும் முரளிக்காக குரல் கொடுத்திருந்தனர்.

அவ்வாறான ஓர் நிலையில் தமது தாய் நாட்டுக்கு எதிராக பிறந்த மண்ணில் இருந்து கொண்டு இவ்வாறு செய்வது வருத்தமளிக்கின்றது.

சர்வதேச போட்டி தொடங்குவதற்கு முன் அந்த மைதானத்தில் உள்ள ஆடுகளத்தை பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறை. இதை அவர்கள் மீறி விட்டனர். இது தொடர்பாக இலங்கை அணியின் மேலாளரை எதிர்கொண்ட போது முரளிதரன் அவரை திட்டியுள்ளார் என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் திலங்கா சுமதிபாலாவின் குற்றச்சாட்டுக்கு முரளிதரன் பதிலடி கொடுக்கும் வண்ணம் பதிலளித்துள்ளார்.

இது குறித்து முரளிதரன் கூறுகையில், எனது அனுபவத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை.

எனவே நான் என்னுடைய பங்களிப்பினை மதிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். நான் எனது தொழில்முறை வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். இதனால் நான் ஒரு துரோகியாக ஆகி விட முடியாது என்று பதிலளித்துள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியம் எங்களை மதிக்கவில்லை என்று கூறிய முரளிதரன், வெளிநாட்டு பயிற்சியாளருக்கு 100 ரூபாய் சம்பளம் கொடுத்தால், இலங்கையர்களுக்கு 20 ரூபாய் தான் சம்பளம் தான் கொடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் முத்தையா முரளிதரனுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

SHARE