சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு மகிந்தவின் ஊரில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைக் கேட்கிறது சீனா

332

அம்பாந்தோட்டையில், சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியைத் தருமாறு சீனா கோரியுள்ளதாக சிறிலங்காவின் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சிறிலங்காவில் இந்தியாவும், சீனாவும் சிறப்பு பொருளாதார வலயங்களை அமைக்கவுள்ளன.

இந்தியா தமது பொருளாதார வலயத்தில் மருந்துப் பொருட்கள் மற்றும் வாகன உதிரிப்பாக தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளது.

அதேவேளை, சீனா அம்பாந்தோட்டையில் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் (55 சதுர கி.மீ ) காணிகளைத் தருமாறு கேட்டிருக்கிறது.

காணிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்திருக்கிறோம். இந்த பொருளாதார வலயத்தின் மூலம் பத்து இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்க முடியும்.

இந்தியா அமைக்கவுள்ள பொருளாதார வலயம் எங்கு அமையும் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்த அடுத்த வாரம் இந்திய அதிகாரிகள் குழு வரவுள்ளது.

அதற்குப் பின்னர், சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்துப் பேச சீன அதிகாரிகள் வரவுள்ளனர்.

சீன- சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாடு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கையெழுத்திடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.mr1

SHARE