வனப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் முறையற்ற விதத்தில் தடிகள் கொண்டு செல்லப்படுகின்றன என விசுவமடு மக்கள் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
மக்களின் முறைப்பாட்டையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உடையார்கட்டு வனப்பகுதியில் பாவாடைக்கல்லு என்ற இடத்திலிருந்து உழவூர்திகள் மூலம் அடிக்கடி, ஆயிரக்கணக்கான தடிகள் ஏற்றிச் செல்கின்றார்கள் என பல தடவைகள் மக்கள் எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அத்தோடு நீங்கள் வந்தால் இதனை நாம் உறுதிப்படுத்துவோம் என்றும் தெரியப்படுத்தினார்கள்.
மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 24.07.2016ம் திகதி விசுவமடு இளங்கோபுரம் பகுதிக்கு நான் சென்றபோது, அங்கு என்னைச்சந்தித்த மக்கள், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பல சலுகைகளை வன இலாகா பிரிவினர் செய்து கொடுக்கின்றார்கள் எனவும் வனப்பகுதி சூறையாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான நீளமான தடிகளை காட்டில் வெட்டி ஏற்றிச்செல்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.
இதனை உறுதிப்படுத்தும் முகமாக குறித்த இடத்திற்கு சென்றபோது வனஇலாகா பகுதியினர் யாரையும் காணமுடியவில்லை. ஆனால் இரண்டு இடங்களில் ஆயிரக்கணக்கில் தடிகள் வெட்டி ஏற்றப்படுவதற்கு தயார் நிலையிலிருந்ததை நேரில் பார்வையிட்டேன். அதன்பின் திரும்பி வந்தபோது வனஇலாகா உத்தியோகத்தர் ஒருவரை காட்டிலேயே காணமுடிந்தது.
அவரிடம் அனுமதிப்பத்திரங்கள் மூலமாகவா தடிகள் கொண்டு செல்லப்படுகின்றது எவ்வளவு தடிகளுக்கு அனுமதி உள்ளது என்று கேட்டபோது அவரது பதில்கள் தடுமாற்றத்துடன் இருந்தன. நாட்டின் காடழிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். வனம் பாதுகாக்கப்பட வேண்டியது என்று அவரிடம் கூறிவிட்டு இது தொடர்பிலான தனது தொடர்ச்சியான கவனம் இருக்கும் என மக்களிடமும் தெரிவித்து பணியகம் திரும்பினேன் என்று தெரிவித்தார்.





