அமலாபால் நடிப்பு தொடரும். விஜய்யின் கவனம் இயக்கத்தில் இருக்கும்.

252

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முன்பு தலைவராக இருந்தவர் ஏ.எல். அழகப்பன். இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் நடிகர் உதயா. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வது அழகப்பன் மனைவியின் வழக்கம். அங்கே ஒரு பெண் தெய்வபக்தியோடு வழிபடுவதைப் பார்த்து பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் ‘நீ என் மகனை கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று கேட்க அந்தப் பெண் வெட்கித்தலை குனிந்து, வீட்டில் பேசச் சொல்லிவிட்டார். அவர்தான் இப்போது உதயாவின் மனைவி, அழகப்பனின் மருமகள். இரண்டாவது மகன் ஏ.எல். விஜய் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களை எடுத்து வந்தார். ஏ.எல். விஜய் இயக்கிய ‘மதராச பட்டணம்’ திரைப்படம் உலகளவில் ரசிக்கப்பட்டது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வமகள்’ படத்தில் அமலாபால் நடித்தார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்து ‘ தலைவா’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க வைத்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இருவருக்கும் காதல் தீவிரமானது. ஏ.எல். விஜய் வீட்டுக்கும், அமலாபால் வீட்டுக்கும் காதல் தெரியவந்தது. ‘நாலு பேருக்கு மெசேஜ் சொல்ற மாதிரி சினிமா எடுக்குற டைரக்டர் நீ. உன் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ. பின்னாடி வருத்தப்படுற மாதிரி முடிவு எடுக்காதே’ என்று விஜய் வீட்டில் சொல்லி விட்டனர்.

ஏ.எல்.விஜய்யின் சுபாவம் அமலாபால் பெற்றோரை கவர்ந்ததால் கல்யாணத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனே சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர். திருமணம் செய்வதற்கு முன்பே அமலாபாலிடம் ‘நீ கல்யாணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது’ என்று விஜய் சொல்ல, அப்போது காதல் மோகத்தில் இருந்த அமலாபால் ஆனந்தமாக தலையாட்டினார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் திருமணம் கோலாகலமாக நடந்தது. சென்னை அடையாறு நட்சத்திர ஓட்டல் அருகிலுள்ள போர்ட் கிளப் பகுதியில் தனி வீட்டில் ஏ.எல்.விஜய், அமலாபால் தனிக்குடித்தனம் செய்தனர்.

முதலில் ‘நடிக்க மாட்டேன்’ என்று கொடுத்த வாக்குறுதியை மீறத் துவங்கினார், அமலாபால். தனது தாய்பூமியான மலையாளப் படத்தில் நடிக்கப்போனார் அமலாபால். அப்போதே அதிருப்தி ஆரம்பமானது. அடுத்து ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோதும் தனது எதிர்ப்பை தெரிவித்தார், விஜய். தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தில் நடிக்கச் சென்றபோது பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தனர். அப்போது அமலாபாலின் பெற்றோர் ‘சினிமாவில் நடிச்சது போதும் நல்ல கணவர் கிடைச்சிருக்கார் மிஸ் பண்ணாதே’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சினிமாவில் நடிப்பதில் பிடிவாதமாக இருந்தார், அமலாபால்.

கடந்த மூன்று மாதமாகவே விஜய் போர்ட் கிளப் வீட்டிலும், அமலாபால் தனியாகவும் வசித்து வருகின்றனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவந்த விஜய் கடந்த 20-ம்தேதி உண்மை நிலையை எடுத்து உரைத்தார். பெற்றோர் முதலில் அதிர்ந்துபோய் கண் கலங்கினர். அதன்பின் விஜய்க்கு ஆறுதல் கூறினர். ஏ.எல். விஜய், அமலாபால் இரண்டு நாட்களுக்கும் முன்பு முக்கியமான நண்பர்கள் முன்பு ஆஜராயினர். ஒருவரை ஒருவர் குறைசொல்லி காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் பரஸ்பர புரிதலோடு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இனி அமலாபால் நடிப்பு தொடரும். விஜய்யின் கவனம் இயக்கத்தில் இருக்கும்.amalapaul

SHARE