கத்தார் நாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு நாளை நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
கத்தாரில் கடந்த 2012-ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன், விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சுப்பிரமணியனுக்கும், செல்லத்துரைக்கும் நாளை மரண தண்டனையை நிறைவேற்ற கத்தார் அரசு முடிவு செய்திருக்கிறது.
இதற்கு எதிராக, கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஏகே அகமது தெரிவித்துள்ளார். இதனிடையே அந்த மூவரையும் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.