திருகோணமலை – குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரட்ண தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ம் திகதி இந்தப் படுகொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 26 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதில் பாடசாலை மாணவி ஒருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுமோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் 38 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு ஏ–15 நெடுஞ்சாலையில் கிளிவெட்டி கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் வடக்குப் பக்கமாக மூதூரை எல்லைப்படுத்தியிருக்கும் ஒரு குக்கிராமமே குமாரபுரமாகும்.
1981ம் ஆண்டளவில் இக்கிராமம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரையின் சகோதரரான குமாரதுரையினால் உருவாக்கப்பட்டது.
இதில் 46 ஏழைக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன. மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் அயல் கிராமங்களில் தொழில்புரிந்து வந்தனர்.
சம்பவம் இடம்பெற்றபோது 74 குடும்பங்கள் வரையில் இந்தக் கிராமத்தில் வசித்து வந்துள்ளன.
குமாரபுரத்திற்கு அருகேயுள்ள கிளிவெட்டியிலுள்ள இராணுவ முகாமுக்கு தெஹிவத்த இராணுவ முகாமிலிருந்து உணவு கொண்டுவந்த இராணுவத்தினர் இருவர் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் அவர்கள் பலியாகியிருந்தனர்.
அதனையடுத்து குமாரபுரம் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், வெறியாட்டம் நடத்தியிருந்தனர்.
இதன் காரணமாகவே அப்பாவி பொதுமக்கள் 26 பேர் துடிதுடித்து பலியாகியதுடன் 38 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் எட்டு இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அப்போதைய மூதூர் நீதிபதி சுவர்ணராஜா முன்னிலையில் இவர்கள் மீதான அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது தெஹிவத்த இராணுவ முகாமைச் சேர்ந்த இந்த எட்டு இராணுவத்தினரும் கொலை செய்யப்பட்டவர்களினது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து மூதூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆரம்பத்தில் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்பு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
எதிரிகளான இராணுவ வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த வழக்கானது 2012ம் ஆண்டு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
எட்டு இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட போதிலும் அதில் இருவர் மரணமடைந்திருந்ததனால் ஆறுபேருக்கு எதிராகவே வழக்கு இடம்பெற்றிருந்தது.
எதிரிகள் மீது தலா 101 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றது.
சட்டமா அதிபரின் சார்பில் சிரேஷ்ட சட்டவாதிகளான சுதர்சன டி சில்வா, விராஜ் வீரசூரிய ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
ஏழுபேர் கொண்ட ஜூரிகள் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட 26 அப்பாவித் தமிழர்களின் உறவினர்களின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே. ரட்ணவேல் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தினால் 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும் நான்கு பேர் உயிரிழந்த காரணத்தினால் 16 உறவினர்களே சாட்சியம் அளித்துள்ளனர்.
வழக்கின் ஏனைய சாட்சியாளர்களான பொலிஸ் அதிகாரிகள், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், அரச உத்தியோகத்தர்கள் என மொத்தமாக 107 பேர் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணையின் போது அரச சட்டவாதியான சுதர்சன டி சில்வா, 26 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த சம்பவமானது பாரதூரமான விடயமாகும்.
சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதனால் இவர்கள் ஆறு பேருக்கும் மரண தண்டனை வழங்கவேண்டுமென்றும் இந்த வழக்கு விசாரணையை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலர் விசேடமாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும் பிரதிவாதிகள் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க முறைப்பாட்டாளர்கள் தரப்பு தவறிவிட்டது.
சாட்சியாளர்கள் சிலரினால் பிரதிவாதிகள் 20 வருடங்களுக்கு பின்னர் அடையாளம் காட்டப்பட்டதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை வழங்குவது நியாயமற்றது என வாதிட்டிருந்தனர்.
வழக்கு விசாரணையையடுத்து சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உரியவகையில் நிரூபிக்கப்படவில்லை என்று ஜூரிகள் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து ஆறு இராணுவ வீரர்களையும் அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ண விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.
குமாரபுரம் கிராமத்தில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் அடையாளம் காட்டப்பட்டிருந்தனர்.
ஆனாலும், வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படாமையினால் இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை யாரும் விமர்சிக்கவோ அல்லது தவறு என்று கூறுவதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது.
வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் வாதப் பிரதிவாதங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இதில் யாரும் தவறு காணமுடியாது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், அதற்காக நிரபராதியொருவர் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே நீதிமன்றங்கள் தீர்ப்பினை வழங்குவது மரபாகும்.
தற்போதைய நிலையில் குமாரபுரத்தில் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த குற்றவாளிகள் யார் என்ற கேள்வி எழுகின்றது.
குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
மயிலந்தனையில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
திரியாயில் 12 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கிளிவெட்டி கிராமத்தில் 36 இளைஞர்கள் கைகள் பிணைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதேபோல் பெருவெளி கிராமத்தில் 1986ம் ஆண்டு 46 பேர் கொல்லப்பட்டனர்.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதே வருடம் ஆகஸ்ட் மாதம் மூதூரில் 17 தொண்டர் நிறுவனப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு படுகொலைச் சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.
இந்த படுகொலை சம்பவங்களில் சில சம்பவங்களுக்கு மட்டுமே படைத்தரப்பினர் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஏனையவற்றில் இன்னமும் படைத்தரப்பினர் தண்டிக்கப்படாத சூழ்நிலையே காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் செம்மணிப்படுகொலை இடம்பெற்றிருந்தது.
இங்கு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் விசுவமடுப் பகுதியில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் 25 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்திருந்தார்.
கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கிலும் இராணுவத்தின ருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு படைத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் பலவற்றில் சில சம்பவங்களில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றன.
தற்போது குமாரபுரம் படுகொலை வழக்கு விசாரணையின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய முடியும்.
எவ்வாறாயினும் குமாரபுரம் படுகொலைக்கு நீதியினை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.