ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பிரதித் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமாகிய வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தை 28.07.2016 அன்று நடத்துவதை தடை செய்து உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணைகளை 10.08.2016க்கு ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன் கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக கொழும்புக் கிளையில் பதவியில் உள்ளவர்கள் யாப்பு விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்ட நிலையில் அவர்களை யாப்பு விதிகளுக்கு அமைய இயங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகிய நிலையில் இறுதிக் கட்ட நடவடிக்கையாக யாப்பு விதிகளை அமூல் படுத்தவும் நல்லாட்சியைக் கொண்டுவரும் முகமாகவும் நீதிமன்ற இடையீட்டைக் கோரும் நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக யாப்பு விதிகளுக்கு முரணாக 29. 06.2016 நிர்வாக சபைக்கான வேட்பு மனுக்கள் முடிவு செய்யப்பட்ட பின்னரே 28.07.16 வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான கடிதங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டன. யாப்பு விதிகளின் படி எந்த ஒரு உறுப்பினரும் வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கு 2 வாரம் முன்னதாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும். அதன்பின்னரே நிர்வாக சபை வேட்பு மனுக்களை முடிவு செய்ய வேண்டும். மேலே கூறப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை நிர்வாக சபையில் இல்லாத உறுப்பினர்கள் நிர்வாக சபையினுள் வருவதை தடை செய்வதுடன் அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்படுவதை ஊக்குவிக்கிறது. நிர்வாக சபையில் பெரும்பான்மையோர் தொடர்ச்சியாக 2 வருடங்கள் அல்லது சிலர் அதற்கு மேலாக பல வருடங்களாக தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றனர். இம்முறை பழைய மாணவர் சங்கத்தின் சரித்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தலைவர் ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் மூன்றாவது வருடமாக தனது பதவியில் நீடிப்பதற்கு முயன்று வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நிர்வாக சபை உறுப்பினராகவும் பல தடவைகள் பிரதி தலைவராகவும் இருந்த எனது தலைவர் பதவிக்கான வேட்பு மனு எந்தக் காரணமும் காட்டப் படாமல் நிராகரிக்கப் பட்டது.
மேலும் சங்கத்தின் வரவு செலவுக் கணக்கு விபரங்கள் யாப்பின்படி ஒரு மாதம் முன்னராகவே உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு முன்னரே அனுப்பாமல் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது 8-10 பக்கங்கள் கொண்ட கணக்கு வழக்கை சமர்ப்பித்து உறுப்பினர்கள் அதை சரியாக வாசிக்க முன்னரே அதை அங்கீகரிக்குமாறு கோருவது திட்டமிட்ட மோசடி ஆகும். உதாரணமாக மருத்துவ முகாமுக்கான செலவு சரியாக ஒரு இலட்சம் ரூபாய்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான செலவு எவ்வாறு சரியாக ஒரு இலட்சம் ரூபாயாக இருக்கும் என்பதற்கு அப்பால் பங்கு பற்றிய மருத்துவர்கள் அனைவரும் தமது சேவைகளை இலவசமாக வழங்கியுள்ள நிலையில் ஒரு நாள் மருத்துவ முகாமுக்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் என்பது மிகவும் அதிகமாக ஏற்றுக் கொள்ள முடியாத செலவாக உள்ளது.
நிர்வாக சபைக் கூட்டங்கள் செயலாளரினால் யாப்பு விதிகளுக்கு அமைய 2 வாரங்களுக்கு முன்னதாகவே அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப் படவேண்டும். முன் கூட்டியே ஒரு சிலருடன் திட்டமிட்டுவிட்டு 3 தினங்களுக்கு முன்னர் ஏனையோருக்கு நிர்வாக சபைக் கூட்டம் இடம் பெறும் என அறிவிப்பது என்னைப் போன்ற பல வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களை வராமல் பண்ணுவதற்குரிய உபாயமாகும். பல சந்தர்ப்பங்களில் உரிய கடந்த கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளும் நிகழ்ச்சி நிரலும் முன் கூட்டியே அனுப்பப் படவில்லை.
வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு கல்வியினாலும் கடின உழைப்பினாலும் வாழ்க்கையில் உயர்ந்த பழைய மாணவர்களை விருந்தினராக கௌரவிப்பது உயர்நிலை அடைந்த பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கத்தின் வழக்கம் ஆகும். இந்த வழக்கமே பாடசாலை மாணவர்களையும் கனிஷ்ட பழைய மாணவர்களையும் மேலும் உயர் நிலையை அடைய ஊக்குவிக்கும் . ஆனால் ஹார்ட்லி பழைய மாணவர் சங்கம் கடந்த 2 வருடங்களாக எந்த பழைய மாணவரையும் கௌரவிக்காமல் இருப்பதுடன் வெளியில் இருக்கும் அரசியல்வாதியை கௌரவிப்பதன் மூலம் மாணவர்களை கல்வி கடின உழைப்பு இன்றி குறுக்கு வழியில் முன்னேறும் பாதையில் செல்ல ஊக்குவிக்கிறது.
யாப்பு விதிகளுக்கு அமைய பழைய மாணவர் சங்கம் இயங்கும் வரை சட்ட விரோத ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான எனது நடவடிக்கை தொடரும்”