ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: குசல் மென்டிஸ் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இலங்கை

289

பல்லகெலே,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில், இளம் வீரர் குசல் மென்டிசின் சதத்தால் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டது.
டெஸ்ட் கிரிக்கெட்

இலங்கை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 117 ரன்களும், ஆஸ்திரேலியா 203 ரன்களும் எடுத்தன. அடுத்து 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 2.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 6 ரன் எடுத்திருந்தது. முதல் இரு நாட்களிலும் மழை காரணமாக தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறியது. கருணாரத்னே ரன் ஏதுமின்றியும், கவ்ஷல் சில்வா 7 ரன்னிலும், கேப்டன் மேத்யூஸ் 9 ரன்னிலும் வெளியேறினர். 86 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை அணி தள்ளாடியது.

குசல் மென்டிஸ் சதம்

இந்த சூழலில் குசல் மென்டிசும், விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமாலும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். அபாரமாக ஆடிய குசல் மென்டிஸ், லயனின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து தனது ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். முதல் சதத்தை சிக்சருடன் எட்டிய 3-வது இலங்கை வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

அணியின் ஸ்கோர் 203 ரன்களாக உயர்ந்த போது, சன்டிமால் 42 ரன்களில் (100 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத் தொடர்ந்து இறங்கிய அறிமுக வீரர் தனஞ்செயா டி சில்வாவும் நிலைத்து நின்று ஆடினார். அவர் தனது பங்குக்கு 36 ரன்கள் எடுத்தார். குசல் மென்டிசின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 8 பவுலர்கள் பயன்படுத்தி பார்த்தும் கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

இலங்கை 196 ரன்கள் முன்னிலை

இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 80 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. குசல் மென்டிஸ் 169 ரன்களுடன் (243 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நாதன் லயன், ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்டுகளையும் (55 டெஸ்ட்) நேற்று எட்டினார்.

இலங்கை அணியை தூக்கி நிறுத்திய 21 வயதான குசல் மென்டிஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த வயதில் சதம் விளாசிய இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை வீரர் ஒருவர் 150 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை அணி இதுவரை 196 ரன்கள் முன்னிலை பெற்று ஓரளவு நல்ல நிலையை எட்டியுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

SHARE