மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவிடம் உதவி

278

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவி நாடப்பட்டுள்ளது என்று ,ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து, அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு கடந்த 22–ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானப்படையின் ஏ.என்–32 ரக விமானம், நடுவானில் பறந்தபோது திடீரென மாயமானது.

அந்த விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள், விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அந்த விமானம் மற்றும் அதில் பயணம் செய்த 29 பேரின் கதி என்ன ஆனது என்று இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

இதனால், அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேரின் குடும்பத்தினர் பரிதவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் மாநிலங்களவையில் நேற்று எதிரொலித்தது. இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு உறுப்பினர்கள், அரசை வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, ,ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதில் அளித்து பேசும்போது, ‘

ஏ.என்–32 ரக விமானம் திடீரென மாயமானதில் பாதுகாப்பு படைகள் குழப்பம் அடைந்துள்ளன. மாயமான விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் என்னென்ன வளங்களை பயன்படுத்துவது சாத்தியமோ, அத்தனை வளங்களையும் பயன்படுத்தி வருகிறோம்.

ஐ.என்.எஸ். நிருபக் கப்பல் மூலம் கடலின் அடிப்பகுதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஐ.என்.எஸ். சிந்துதுர்க் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த விமானம், ரேடாரில் மறைந்து போவதற்கு முன்பாக, வலது புறமாக சாய்ந்து 23 ஆயிரம் அடியில் இருந்து கீழே இறங்கி இருக்கிறது.

அந்த விமானத்தில் இருந்து ஆபத்து குறித்த கடைசி தகவல் உள்ளிட்ட எந்த தகவலும் பெறப்படவில்லை. எல்லாமே வெறுமையாகிவிட்டது.

அதே நேரத்தில் நாசவேலைக்கான வாய்ப்பும் மிகவும் குறைவுதான்.

மேலும் அமெரிக்கா, செயற்கை இடைக்கண் ரேடார்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் பரந்த பார்வை வசதியை பெற்றிருப்பதால், அந்த நாட்டின் உதவியை மத்திய அரசு நாடி உள்ளது.

விமானம் மாயமான 22–ம் தேதி அன்று அடர்ந்த மேகக்கூட்டங்கள் இருந்த சூழ்நிலையில்கூட, அவற்றால் (அமெரிக்க செயற்கைக்கோள்கள்) சிக்னல்களை எடுத்துக்கொள்ள முடியும்.

அந்த விமானம், திடீரென மாயமானது பற்றி நான் பாதுகாப்புத்துறை வல்லுநர்களிடம் பேசினேன். அவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர் என்றார்.

– Vikatan

SHARE