தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் தான் எழுந்து நடந்ததாக சுட்டுரையில் (டுவிட்டர்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 14-ம் தேதி தனது சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் மாடிப் படியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவர்களின் ஆலோசனையின்படி தற்போது மருத்துவமனையிலேயே அவர் ஓய்வெடுத்து வருகிறார். தொடர்ந்து சில வாரங்களுக்கு பூரண ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
தனது உடல்நிலை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை பதிந்துள்ள செய்தி: ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம் என்று கூறியுள்ளார் கமல்.