(வட்டுவாகல்) முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கோத்தபாய இராணுவ முகாமும் அதனைச் சூழவுள்ள 617 ஏக்கர் நிலப்பரப்பையும் இன்றைய தினம் 03.07.2016 அன்று அளவீடு செய்வதற்காக நில அளவை உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு வந்தபோது, மேற்படி இராணுவ முகாம் அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு உரித்தானது என்பதனால், இவ்விடயந் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்குத் தெரியப்படுத்தியதன் காரணமாக, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோதராதலிங்கம், திருமதி.சிறீஸ்காந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் இவ்விடத்தில் ஒன்றுகூடி உடனடியாக இவ்வளவீட்டாளர்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இச் சம்பவத்தின் காரணமாக வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்துக்கள் அனைத்தும் ஒரு மணி நேரத்திற்குத் தடைப்பட்டதோடு, அபகரிக்கப்படவிருந்த காணியானது 37 நபர்களுக்குச் சொந்தமான காணிகள் என உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவரும் கையெழுத்திட்ட கடிதங்களும் நில அளவையாளர்களிடம் கையளிக்கப்பட்டதன் நிமித்தம் அங்கிருந்து நில அளவையாளர்கள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரது கருத்துக்களைக் கானொளி மூலம் காணலாம்.
தகவலும் படங்களும் :- தினப்புயல் செய்திச்சேவை