முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தான் இந்தியாவின் துருப்பு சீட்டு, அவரை கோஹ்லி சரியாக பயன்படுத்தவில்லை என்று இந்திய முன்னாள் தலைவர் கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட்டுகளில் ஆடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.
இதில் முதல் டெஸ்டை இந்தியா வென்ற நிலையில், ஜமைக்காவில் 2வது டெஸ்ட் நடந்தது.
இதில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் சில சொதப்பலால் அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கூறுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், போட்டி டிராவில் முடிந்துள்ளது.
5 சிறப்பான பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டும் கோஹ்லியால் போட்டியை வெல்ல முடியவில்லை. அஸ்வின் தான் இந்தியாவின் முக்கிய பவுலர்.
இரண்டாவது இன்னிங்சில் அமித் மிஷ்ராவுக்கு பதிலாக அவரை முதலிலேயே பந்துவீச அழைத்திருக்க வேண்டும்.
அஸ்வினை முதலில் பந்து வீச சொல்லியிருந்தால் விக்கெட்டுகள் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக மாறிய பிறகு அஸ்வினை அறிமுகம் செய்தது பலனளிக்கவில்லை.
மேலும், உமேஷ் யாதவையும் கோஹ்லி நன்கு பயன்படுத்தவில்லை. அவர் வெறும் 12 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். இது அவரின் திறமைக்கு குறைந்த மதிப்பீடு என்று தான் பார்க்கிறேன்.
எனவே இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தனது வீரர்களில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.
மேலும், 2வது டெஸ்ட்டை ’டிரா’ செய்த போதிலும், மேற்கிந்திய தீவுகள் தொடரை வெல்லும் திறமையுடையது என்று நான் கருதவில்லை. அவர்களால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என்பதே எனது கணிப்பு என்று கூறியுள்ளார்.