வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை தெரிவு செய்ய முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களினுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ். சிவகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
டொனமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரையிலான விடயங்களை உள்ளடக்கிய மு.திருநாவுக்கரவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழா வவுனியா, சிந்தாமணி ஆலய மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வலுவான தமிழ் தலைமைகள் எங்களுக்கு இருந்தது. ஒற்றைச்சொல்லில் நாம் கட்டுப்பட்டு இருந்தோம். கொள்கையில் நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது. அவர்கள் உருவாக்கினார்கள் என்பதற்காக தான் நாம் தற்போதும் வீட்டுக்கு வாக்களித்துக்கொண்டிருக்கின்றோம்.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்களிடம் இருந்த போராட்ட மனமும், எதிர்ப்பு அரசியலுடைய நோக்கமும், விடுதலை பற்றிய சிந்தனையும் மிக மோசமாகக் குறைவடைந்துள்ளது.
போராட்டம் போராட்டம் என்று கூட்டங்களில் பேசிய நிலை தான் தமிழ் தரப்பு இன்று வெறுமையாகக் காணப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியோடு தமிழ் மக்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், தேசியம், தமிழீழம் என்ற அனைத்தும் தோற்றுப்போய் புதைக்கப்பட்டு விட்டது.
எத்தனை ஏக்கர் காணி பொலிஸாராலும் கடற்படையாலும் அரசாங்கத்தாலும் அபகரிக்கப்பட்டு வைத்திருக்கின்றனர்கள் என்ற புள்ளி விபரத்தை நாங்கள் வைத்திருக்கின்றோமா?
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒரு இலட்சத்து 46 ஆயித்து 689 பேரின் நிலை, அரச திணைக்களத்தின் கணக்கீட்டு ஒப்பீட்டுக்கு அமைவான எண்ணிக்கையை வைத்திருக்கின்றோமா? மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்த இனவாத, அடிப்படைவாதப் போக்கு இருந்த காரணத்தினால் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை தேசிய பற்றுள்ளவர்களாக இருந்தோம்.
ஒன்றரை ஆண்டு இணக்க அரசியலினால் தமிழ் மக்கள் இணங்கிச் சென்று, உத்தியோகத்தையும் பெற்று வியாபாரத்தையும் அடைந்து சகஜமாக வாழ்ந்து விடுவோமோ என்ற ஐயம் இன்று பலர் மத்தியிலும் தோன்றியுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்திற்கு இடத்தை தெரிவு செய்ய முடியாதவர்கள் தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கு தீர்விற்கு பற்றோடும், நேர்மையோடும், மக்களினுடைய விடுதலைக்காக உழைத்த வீரர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு செயலாற்றுவார்களா என்று தெரியவில்லை?
2009 ஆம் ஆண்டுக்கு முதல் வலுவான தமிழ் தலைமை எங்களிடம் இருந்தது. ஒற்றைச் சொல்லில் கட்டுப்பட்டு இருந்தோம். அந்தச் சொல்லில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவர்களால் உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இன்னும் நாங்கள் வீட்டுக்கு வாக்களிக்கின்றோம். அதனை தேர்தல் காலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. 07 ஆண்டுகளாக இந்த ஜனநாயகம் என்ற போக்கில் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையில் நாங்கள் கண்ட பயன் என்ன? வெற்றிகள் என்ன? எதனை நாங்கள் செய்திருக்கின்றோம். ஆதாரபூர்வமாக ஆக்கபூர்வமாக நாங்கள் எதனை முன்வைத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.