தமிழ் மக்களுக்கு 1948இல் இருந்து இலங்கை அரசினால் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதை எதிர்த்து போராடிய வீரர்களின் தியாகங்களையும் விடுதலைப்புலிகளின் வெற்றிச் சமர்களையும் தமது உன்னத படைப்புக்களினால் உலகிற்கு எடுத்துக்காட்டியவர்கள் கலைஞர்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு சிலாவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கலைஞர்கள் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு விசேட உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்,
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் தோற்றுவிட்டதாக கருத முடியாது. விடுதலை போர் வீரர்களுக்கு மரணம் மட்டும்தான் ஏற்பட்டது ஆனால் ஒருபோதும் தோல்விகள் ஏற்படாது.
விடுதலைப்புலிகளை இறுதியுத்தத்தின் போது இந்த மண்ணில் விதைந்துள்ளார்களே தவிர அழித்துவிடவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அதன்பின்னர் கைவிடப்பட்டிருந்தார்கள். வன்னி குரோஸ் கலாச்சாரப் பேரவை மீண்டும் அவர்களை ஒன்று சேர்த்துள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் கலைஞர்கள் இன்று கௌரவிக்கப்படுகின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர், முல்லைத்தீவு பிரதேசசெயளாலர், முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிப்பாளர் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.