மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்து மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து விரைவில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாயக்கொட ஆராய்ச்சி இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்திரவின் பணிப்பின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கலை கலாசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பொலிஸ் அலுவலகத்தின் இவ்வாறான கலை கலாசார நிகழ்வுகள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மூவின மக்களின் கலை கலாசாரங்களை கொண்டதாக நடத்தப்பட்ட இவ்வாறான நிகழ்வுகள், இன ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான விடயமாகும்.
கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேச மக்கள் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டு திரும்பமுடியாத நிலை காணப்பட்டது.
எனினும், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த நிலைமை மாற்றம் பெற்றுள்ளது. இன்று எந்தநேரத்திலும் மக்கள் வெளியில் சென்று சுதந்திரமாக வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்துகள் பாரிய பிரச்சினையாகவே இருந்துவருகின்றது. அதேபோன்று சிறு குற்றச்செயல்கள் 2009ஆம் ஆண்டு தொடக்கம் அதிகளவில் இருந்து வருகின்றன.
எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்படும்போது குற்றச்செயல்களை குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.