சு.க.வைச் சிதைப்பதும் ஐ.தே.க.வை வளர்ப்பதுவுமே மஹிந்தவின் திட்டம்!

273

mahinda

அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக விரோத அரசியலில் மூழ்கிப் போயுள்ள எமது நாட்டில் நிரந்தரமான அரசியல் சகவாழ்வைத் தோற்றுவிப்பதென்பது இலகுவான காரியமல்ல.

இரண்டு பிரதான தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்திக் கொண்டுள்ள அரசியல் சகவாழ்வுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சதிமுயற்சிகளைப் பார்க்கின்ற போது அரசியல் தோழமையென்பது இலங்கையில் எத்தனை சவால்கள் நிறைந்ததென்பது நன்றாகவே தெரிகிறது.

அரசியல் கோட்பாடுகளைப் பொறுத்த வரை இரண்டு விதமான மக்கள் பிரிவினர் இருக்கின்றார்கள். தாங்கள் சார்ந்த கட்சியே ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்க வேண்டுமென விரும்புபவர்கள் முதலாம் வகையினர்.

இவர்கள் தீவிரமான கட்சிப் பற்றாளர்கள். நாட்டில் எக்காலமும் எதிரும் புதிருமான பகைமை அரசியல் தொடரப் போகிறதேயென்ற கவலை இல்லாதவர்கள் இவர்கள். இரு பிரதான கட்சிகளும் புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து ஆட்சி புரிவதனால் நாட்டில் நிரந்தரமான நல்லிணக்கமும் அபிவிருத்தியும் ஏற்படுவதற்கு இடமுண்டென்ற பொதுஅக்கறை இல்லாதவர்கள் இவர்கள்.

இரண்டாவது வகையினர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். நாட்டில் விரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு , நிரந்தரமான தேசிய நல்லிணக்கம் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்ற அக்கறை கொண்டவர்கள் இவர்கள்.

இவ்வாறான இரண்டாம் வகை அரசியல் கோட்பாடு கொண்டவர்கள் உண்மையிலேயே அரசியல் பக்குவம் நிறைந்தவர்களென்றே கூற வேண்டும்.

இலங்கையில் இப்போது நடந்துகொண்டிருப்பது சகவாழ்வு அரசியலுக்கும் விரோத அரசியலுக்கும் இடையிலான நேருக்கு நேர் யுத்தம் ஆகும்.எதிரெதிர்த் துருவங்களாக நின்ற ஐ.தே.கவையும் சு.கவையும் பொது நிகழ்ச்சித் திட்டமொன்றின் பேரில் ஒரேகுடையின் கீழ் கொண்டு வருவதென்பது இலகுவான காரியமல்ல.

இலங்கையின் ஜனநாயக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அவ்வாறானதொரு அற்புதம் நிகழ்ந்தது. ஐ.தே.க வும் சு.கவும் புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுப்புடனும் ஒன்றிணைந்து கூட்டு அரசாங்கமொன்றைத் தோற்றுவித்து ஒன்றரை வருட காலம் கடந்து விட்டது.

இத்தகைய அரசியல்கூட்டு பொதுநன்மைக்கானதா இல்லையேல் தனிப்பட்ட அரசியல் நலனுக்கானதா என்ற ஆய்வெல்லாம் வேறு விடயம். இரண்டு கட்சிகள் இணைந்து கொண்ட கூட்டரசாங்கத்தினால் பண்பு நிறைந்த அரசியல் கலாசாரமொன்று முதன்முறையாக எமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதென்பதே இங்கு முக்கியமான விடயம்.

நாகரிக அரசியல் கலாசாரத்தைப் பொறுத்தவரை மேற்குலக நாடுகளையே நாம் உதாரணமாகக் கூறுவதுண்டு. ஆனால் முதன்முறையாக இலங்கையையும் நாகரிக அரசியல் கலாசாரத்துக்கு உதாரணமாகக் கூறும்படியாக சகவாழ்வு அரசியலொன்று எமது நாட்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த அரசியல் தொடரப் போகின்றதென்பதே நல்லிணக்க விரும்பிகளின் கவலையாக இருக்கிறது.ஐ.தே.கவைப் பொறுத்தவரை அக்கட்சி மிகுந்த கட்டுக்கோப்பாகவே உள்ளது.

கட்சியிலுள்ள அத்தனை பேரும் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு கூட்டரசாங்கத்தை தொடர்ந்தும் கட்டிக்காப்பதற்கான எண்ணத்துடனேயே செயற்படுகின்றனர். ஐ. தே. கவுக்குள் இப்போது அதிருப்தி அணி என்பதெல்லாம் கிடையாது. எதிர்வரும் அடுத்த பொதுத் தேர்தலிலும் தோழமை அரசியலைக் கடைப்பிடிப்பதற்கு இவர்கள் தயாராகவே உள்ளனர்.

சுதந்திரக் கட்சி தரப்பில்தான் சிக்கல்கள் நிறைந்துள்ளன. கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேரையும் ஒரே குடையின் கீழ் வைத்திருப்பதற்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்ற போதிலும் அம்முயற்சியில் முழுமையான பலாபலனைக் காண முடியாமலேயே உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நோக்கம் சு. க வைக் கட்டிக் காப்பாற்றுவதல்ல. சு.கவை இரு வேறு அணிகளாகப் பிளவுபடுத்துவதன் மூலம் ஐ.தே.கவைப் பலம் மிகுந்த கட்சியாக உருவாக்குவதே மஹிந்தவின் இப்போதைய மறைமுகத் திட்டமாக உள்ளது.

ஜனாதிபதி மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் நாடு ஆட்சி செய்யப்படுவதைப் பார்க்கிலும், ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவது உகந்ததென மஹிந்த சிந்திக்கிறார்.

மஹிந்த தனது நேரடியான அரசியல் விரோதியாக மைத்திரியையே கருதுவதால் இவ்வாறுதான் அவர் சிந்திக்கிறார். மஹிந்தவின் இன்றைய அரசியல் போராட்டங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அவதானிக்கின்ற போது இந்த உண்மை நன்றாகவே புலப்படுகிறது.

சுருங்கக் கூறுவதானால் சு.க.வைச் சிதைப்பதும் ஐ.தே.க.வை வளர்ப்பதுவுமே மஹிந்தவின் இன்றைய மறைமுகத் திட்டம்.இவ்வாறான அரசியல் சூழல் நெருக்கடியில் சுதந்திரக் கட்சியானது பாரிய ஆபத்தொன்றுக்கு முகம்கொ கொடுத்துள்ளதென்றே கூற வேண்டியுள்ளது.

என்னதான் அரசியல் சகவாழ்வு என்றாலும் கூட ஆறு தசாப்த காலப் பழைமை வாய்ந்த சுதந்திரக் கட்சியானது அதல பாதாளத்துக்குள் தள்ளப்படுவதை சு.க அபிமானிகள் ஒருபோதுமே ஏற்கப் போவதில்லை.

ஐ.தே.கவுக்கு உள்ளதைப் போன்று சு.கவுக்கும் ஆயுட்கால விசுவாசிகள் உண்டென்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் எந்தவொரு நாட்டிலும் ஒரே கட்சி பலம் பெற்று எக்காலமும் ஆட்சி நடத்துவதென்பது ஜனநாயகம் படிப்படியாக மறைவதற்கே வழிவகுக்கும்.

எனவே சு.கவை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய கடப்பாடு அதன் தலைமைத்துவத்துக்கு நிச்சயம் உண்டு.இதன் விளைவுதான் சு. க தலைமைத்துவம் இன்று ஆரம்பித்துள்ள ‘களையெடுப்பு’ ஆகும்.

மஹிந்தவின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதயாத்திரையில் பங்கேற்றோர் மீது சு. கவின் ஒழுங்கு விதிகளின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பமாகியிருக்கிறது.

கட்சிக்குள் சலசலப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக இதுவரை காலமும் பொறுமை காத்து வந்த சு.க தலைமைப்பீடம் இப்போது செயலில் இறங்கியுள்ளது.

சு.கவிலிருந்து ஓரிருவர் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலும் பலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றே தெரிகிறது.

நாட்டின் பெரும் தேசியக் கட்சியென்ற வகையில் இவ்வாறான கட்டுக்கோப்பு நடவடிக்கை தவிர்க்க முடியாததுதான்.

SHARE