விடுதலைப்புலிகள் காலத்து கலை எழுச்சி முல்லைத்தீவில் மீண்டும் மிளிர்கிறது. வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் பேச்சு

251
வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் முத்தமிழ் விழா நிகழ்வில் பங்கேற்ற முல்லை மாவட்டக் கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 08-08-2016 அன்று காலை 10.00 மணிக்கு வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் தலைவர் திரு.சி.நாகேந்திரராசா தலைமையில் முல்லைத்தீவில் சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய கௌரவ.வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் கலந்து சிறப்பித்தார். பொதுச்சுடரினை  வைத்திய கலாநிதி சி.சிவமோகன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. இராஜேஸ்வரன், சிறந்த ஆற்றுகையாளரும் யோகா பயிற்சி நெறியாசிரியருமான  பூ.பிரதீபன், புலம்பெயர் நாட்டில் வசித்து வரும் த.இன்பவரன், ஓய்வுபெற்ற அழகியல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.க.அற்புதராசா ஆகியோர் ஏற்றி வைத்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழத்;தாய் வாழ்த்தினை முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.உ.முனீஸ்வரன் வழங்கினார். வரவேற்பு உரையினை வன்னிக்குறோஸ் பேரவையின் செயலாளர்.திரு.திவேலவனம் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரையினை  கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், சிறந்த ஆற்றுகையாளரும் யோகா பயிற்சி நெறியாசிரியருமான பூ.பிரதீபன் ஆகியோர் நிகழ்த்தினார். பிரதம விருந்தினர் உரையினை வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் எமது தாயகத்தில் கலைஞர்கள், ஆற்றுகையாளர்கள், அண்ணாதிமார்கள் எமது பாரம்பரிய கலை கலாச்சாரத்தை கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இருந்தும் எமது கலைஞர்களுக்கிடையே ஒற்றுமையின்மை காரணமாக கலை கலாச்சாரம் அழிவடைந்து விடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. ஒரு படைப்பாளி ஒரு படைப்பினை மேற்கொண்டால் அந்த படைப்பினை விமர்சனம் செய்வதை விட அந்த படைப்பினை விட சிறந்த படைப்பினை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எமது கலைஞர்களுக்கிடையே எழ வேண்டும். எமது கலை கலாச்சாரத்தினூடாக, கலை நிகழ்வுகளினூடாக பல்வேறுபட்ட சமூக விழிப்புணர்வுகளையும் எமது பண்பாட்டு நிகழ்வுகளையும் எமது மக்களிடையே கொண்டு செல்ல முடியும். விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் எமது விடுதலையின் உண்மைத்தன்மையையும் போராளிகளின் தியாகங்களையும், மக்களின் உணர்வுகளையும் சர்வதேச சமூகத்திற்கு  கலை நிகழ்வுகளினூடாகவும் பல்வேறுபட்ட தெருவழி நாடகங்களூடாகவும் கொண்டு செல்லப்பட்டது. அதற்கான கட்டமைப்புகளை தேசத்திற்காக போராடிய விடுதலைப் புலிகள் பல்வேறுபட்ட கட்டமைப்புக்களில் கலை, கலாச்சாரத்திற்கு முன்னுரிமையளித்து வந்தனர். எமது கலைஞர்களை கௌரவித்தனர். விடுதலைப் போராட்டம் மௌனித்ததன் பின்னர் எமது கலை கலாச்சாரத்தின் பண்பாடுகளை திட்டமிட்டே இந்த அரசு சிதைக்க முயற்சிக்கின்றது. எனவேதான் எமது கலை கலாச்சாரத்தை கட்டியெழுப்பி  கலைஞர்களை கௌரவிக்க வேண்டும் என்று இந்த கலாச்சார பேரவையின் நிகழ்வு இங்கு இடம்பெறுகின்றது. விடுதலைப் போராளிகள் போரில் மடிந்தார்களே தவிர எமது விடுதலைப் போராட்டம் தோற்றுப் போகவில்லை. எமது மடிந்த போராளிகள் விதைக்கப்பட்டே உள்ளனர். அந்த மூச்சே இன்று இந்த கலை கலாச்சார பண்பாடுகளை கட்டிக்காக்க உந்து சக்தியாக இருக்கிறது.
எனவே எமது அன்பான கலைஞர்களே, அண்ணாவிமார்களே உங்கள் கலைப்பயணத்தை ஒற்றுமையுடன் கொண்டு செல்லுங்கள் என தெரிவித்தார். தொடர்ந்து கலைஞர்கள், அண்ணாவிமார்களுக்கான சான்றிதழ்கள், விருதுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்த விருதுகளை புதுக்குடியிருப்பு பிரதேச முன்னாள் கலாச்சார உத்தியோகத்தர்.பூ.பிரதீபன், முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.உ.முனீஸ்வரன், வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து கலைஞர்களின் கலை நிகழ்வு வரிசையில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய கலாமன்றத்தின் கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்தும், கற்சிலைமடு பரந்தாமன் கலாமன்றத்தின் பண்டாரவன்னியன் வரலாற்று நாடகமும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலைஞர்கள், அண்ணாவிமார்கள், பொதுமக்கள் என ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    DSC_3287 DSC_3288 DSC_3289 DSC_3293 DSC_3305 DSC_3335 DSC_3409 DSC_3421
SHARE