வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாட தொகுதிகள் மற்றும் சமையல் பாத்திரத் தொகுதிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்ற நிலையில், யாழ் மாவட்ட கிராமமட்ட சங்கங்களுக்கான உதவிகள் நேற்று (09.08.2016) மாலை ஆனைப்பந்தியில் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிமனையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண சபையின் கௌரவ அவைத்தலைவர் C.V.K.சிவஞானம், வடமாகாண கிராம அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாணசபை கௌரவ உறுபினர்களான க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரட்ணம், க.தர்மலிங்கம், வே.சிவயோகம், க.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், ச.சுகிர்தன் மற்றும் அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் J.J.C.பெலிசியன், முன்னாள் மன்னார் மாவட்ட அரச அதிபர் நீக்கிலாப்பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அங்கு உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் விந்தன் தமது அமைச்சின் ஊடக வழங்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை அமைச்சர் டெனிஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி செயற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன் கிராம மட்ட சங்கங்கள் தமக்கு வழங்கப்படும் உதவித்திட்டங்களை கொண்டு வருமானங்களை பெற்று முன்னேற வேண்டுமென்றும் கிராமங்களின் வளர்சியிலேதான் நாட்டின் முன்னேற்றம் தங்கியுள்ளதென்றும் தெரிவித்தார். மேலும் அந்தந்த பகுதிக்குரிய மாகாணசபை உறுப்பினர்களுக்குத்தான் அவர்கள் பகுதியில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தெரியும் எனவும் அதன்காரணமாகவே தமது அமைச்சினால் வழங்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் ஆலோசனையோடு வீதி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுவதாகவும் பல உறுப்பினர்கள் நடைபெறும் வேலைகளின் தரம் மற்றும் பிரச்சினைகள் பற்றி தமக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.