ஹாக்கி: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தியது இந்தியா

229

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது இந்தியா.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணிக்கு 8-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர் சிங்லெனாசிங் கோலடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து வேகம் காட்டிய இந்திய அணி 35-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை கோதாஜித் சிங் அடித்தார்.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் 0-2 என பின்தங்கிய ஆர்ஜென்டீனா, 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோலடிக்க கடுமையாகப் போராடியது. ஆனால் இந்திய வீரர்களும் அபாரமாக ஆடியதால் ஆர்ஜென்டீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

எனினும் 49-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஆர்ஜென்டீனாவின் கொன்ஸாலோ பெய்லெட் கோலடித்தார். இதனால் இந்தியாவுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. எனினும் இதன்பிறகு இந்தியாவின் பின்களத்தைத் தாண்டி ஆர்ஜென்டீனாவால் கோலடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, அடுத்த ஆட்டத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தனது 4-ஆவது ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நெதர்லாந்து அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

SHARE