பொலிஸ் – பொதுமக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்உரை

569

c-v-wigneswaran

வித்தியாவின் கற்பழிப்பு, கொலை ஆகியவற்றின் பின்னர் மாகாண, மாவட்ட, பிரதேச மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்திருந்தோம்.

எதிர்பாராத அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றின் தொடர் நடவடிக்கைகள் தடைப்பட்டன. உதாரணத்திற்கு சிரேஷ்ட உப பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க அவர்கள் தமது முழு ஒத்துழைப்பையும் நல்கிக் கொண்டிருக்கும் போது அவர் மாற்றலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய முயற்சிகள் கூட இரண்டு மூன்று தடவைகள் தடங்கலுற்ற போதும் இன்று இக்கூட்டம் கைகூடியிருப்பது மகிழ்வைத் தருகின்றது.

மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று வியாழக் கிழமை காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எனது தமிழிலான பேச்சு சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட இருக்கின்றது என அறிகின்றேன். எனினும் எனது உரையின் இறுதியில் அதன் சாராம்சத்தை ஆங்கிலத்தில் கூறுவேன் எனத் தெரிவித்துக் கொண்டு எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

மேலும் புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களால் எனக்கனுப்பப்பட்ட கடிதங்கள் பொலிஸ் – பொதுமக்கள் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை அவர் முற்றிலும் வரவேற்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றது. அது எமக்கு மகிழ்வை அளிக்கின்றது.

பொலீஸ் சேவை என்பது முன்னைய நிலையில் இருந்து விலகிப் புதிய பரிமாணம் பெற்று அது பொது மக்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு சேவையாக மாற்றப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றமான செயற்பாடு.

இதுவரை காலமும் பயங்கரவாத மனநோக்குடன் தான் பொலிஸ் சேவை வட கிழக்கு மாகாணங்களில் இயங்கியது.

போர்க்காலத்திலிருந்து சமாதான காலத்திற்குத் திரும்பியுள்ளோம் என்ற உணர்வு இப்பொழுதுதான் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கியுள்ளது.

எமது நாட்டின் பாதுகாப்புப் பகுதியின் மறுசீரமைப்பு இன்று முக்கியமான தொன்றாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் கருதப்படுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளாகக் கூடிய வலுக் குறைந்த சமூகப் பிரிவுகள் வலுப்பெற நாங்கள் பாடுபட வேண்டும்.

இதனால்த்தான் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பங்காளர் கூட்டணி சகல மட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று எண்ணப்பட்டது.

முன்பிருந்த விழிப்புக்குழுக்கள் அரசியல் கட்சிகள் சார்பான பாதிப்புக்கு உள்ளானதால் கட்சிகளைத் தவிர்த்து மக்கள் தலைவர்களையும் பொலிசாரையும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாவது அவசியம் என்று கருதப்பட்டது.

பொலீஸ் – பொது மக்களின் உறவு நிலை இன்னும் திருப்திகரமாக அமையாமையால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களினால் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து மக்கள் பாதுகாப்பில் இனி இணைந்தே ஈடுபடலாம் என்று கருதினோம்.

உதாரணத்திற்கு எமது மக்கள் பிரதிநிதிகள் அவர்களைச் சுற்றி நடைபெறும் குற்றச் செயல்களை பொலிசாருக்கு உணர்த்தினால் அவர்கள் அது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுக்க இவ்வாறான புரிந்துணர்வு உதவி செய்யும் என்று நம்புகின்றோம்.

இப் பகுதியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் குற்றச் செயல்கள் மிக அதிகரித்திருப்பது எம்மையும் பொலீஸ் சேவையையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இரவு நேரங்களில் பெண்கள் தங்கள் வீடுகளில் தனியே தங்கியிருந்த காலங்கள் போய், வெளியில் சென்று வந்த காலங்கள் போய் இன்று பகல் நேரத்தில் கூட தனியே வீட்டில் இருப்பதற்கோ அல்லது வீதி வழியே செல்வதற்கோ இயலாத ஒரு நிலை உருவாகியிருக்கின்றது.

களவு, கொலை, கற்பழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் காண்கின்றோம்.

அது மட்டுமல்ல வடமாகாணம் கஞ்சா விற்பனையின் மத்திய நிலையமாக மாறியிருப்பதும் மிகவும் வெறுப்பையும் வேதனையையும் தருகின்றன.

பொலிஸார் பல கடத்தற் செயற்பாடுகளை முறியடிக்கின்ற போதும் இச் செயற்பாடுகள் தொடர்கின்றன என்றால் இதன் பின்னணி என்ன,கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் காவல் துறையினருக்கும் இடையில் ஏதாவது ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட வேண்டியுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு இவற்றுடன் சம்மதம் இருக்கின்றதா என்பது ஆராயப்பட வேண்டியிருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாள் முழுவதும் உழைத்துக் களைத்த பொது மக்கள் நிம்மதியாக வீட்டில் நித்திரை கொள்வதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும்.

இரவு நேர காவல்களுக்கும் நடமாடும் சேவைகளுக்கும் என அதிகளவில் பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்களின் சேவை இன்னமும் திருப்தி தருவதாக அமையவில்லை என்றே கருதுகின்றேன்.

உதாரணமாக ஒரு வீட்டில் களவு நடைபெறுகின்ற போது பல தொலைபேசி அழைப்புக்கள் அண்மையில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்கள் பின்பின்பாகவே களவுகள் அனைத்தும் முடிவடைந்து, கள்வர்கள் இலகுவாக தப்பிச் சென்ற பின்னரேயே பொலீஸாரின் வருகை பல சந்தர்ப்பங்களில்அவதானிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் தெளிவாக்கப்படவில்லை.

பொலிசாரின் அசிரத்தையா அல்லது அவர்களின் கட்டமைப்புக்களின் குறைபாடா அல்லது அவர்களுக்குக் கள்வர் மீதுள்ள காதலா என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

யாழ்ப்பாண நகரத்தின் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு களவுகள் நடைபெறுகின்ற போது பொலீஸார் உடனடியாகச் சமூகம் கொடுக்காமை கூடுதலான சந்தேகங்களையும்,பொலீஸ் பொது மக்கள் உறவில் விரிசலையும் ஏற்படுத்துகின்றன.

எனவே இவை தொடர்பில் நாம் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஆராய்தல் அவசியமாகும். தொலைபேசி முறைப்பாடுகள் அல்லது நேரடி முறைப்பாடுகள் கிடைத்து குறிப்பிட்ட நேர காலத்தினுள் நடவடிக்கைகளில் இறங்காத பொலிசார் சம்பந்தமாக உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் காலத்துக்கு காலம்,பொதுமக்களை பயப்பீதியில் உறைய வைக்கும் பல அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

யுத்த கால இராணுவ ரோந்துகள், விசாரணைக்கான அழைப்புகள்,விசேட தேடுதல்கள், புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் போன்றவை சற்று குறைந்த நிலையில் புதிதாக முளைத்தது கிறீஸ் பூதம்.

அதைத் தொடர்ந்து வடக்கு இளைஞர்களின் குழுக்களுக்கிடையேயான வீதி மோதல், வாள் வெட்டு போன்ற அட்டகாசங்கள் நடைபெற்றன.

அதே போன்று போதைப்பொருட் பாவனை பாலியல் துஸ்பிரயோகங்கள்,சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள், களவுகள், கொலை, கொள்ளை போன்றவை நடைபெறத் தொடங்கின.

அதே நேரத்தில் மண்கடத்தல், மரக் கடத்தல், வளங்களைச் சூறையாடுதல் போன்ற குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கின.

போர்க்கால அதிர்ச்சிகள் ஏற்படுத்திய மனோநிலைப் பாதிப்புக்கள் இவற்றின் பின்னணியில் இருக்கின்றனவா என்பது ஆராயப் படவேண்டும்.

புதினப் பத்திரிகைகளில் தினமும் வெளியாகின்ற செய்திகள் எம்மைக் கதிகலங்க வைக்கின்றன.

நேற்றைய பத்திரிகையில் ஒரு சிறுவனின் களவு நடவடிக்கைகள் தொடர்பாக அவனின் தந்தையாரே அச்சிறுவனை பொலீஸில் ஒப்படைத்து அவனைத் திருத்தித் தருமாறு வேண்டியதாகவும், அவனுடன் இணைந்து களவுச் செயல்களில் ஈடுபட்ட இன்னும் 7 பேரை பொலீஸார் கைது செய்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

மரம் கடத்தப்படுகின்ற செய்தியைப் பொலிஸாருக்குத் தெரிவித்த பின் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய அவ் வாகனத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பிறிதொரு குழுவினர் நையப்புடைத்து அவர் குற்றுயிராக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது.

இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது எமது காவல் நடவடிக்கைகளில் பல ஓட்டைகள் இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது. இத் துவாரங்கள் அடைக்கப்படல் வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே எமது இன்றைய உரையாடல் இடம்பெறவிருக்கின்றது.

1.மாகாண மட்ட ஒருங்கிணைப்புக் குழு

2.மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழு

3.பிரதேச மட்;ட ஒருங்கிணைப்புக் குழு

ஆகியன காலாகாலத்தில் கூடுதல் பற்றியும் இந்தக் குழுக்கள் வினைத்திறன் மிக்க குழுக்களாக செயற்படுவதன் மூலம் இப் பகுதியில் அமைதியையும்,பயப்பீதியற்ற நிலையையும் எவ்வாறு நிலை நாட்டலாம் என்பது பற்றியும்ஆராய இருக்கின்றோம்.

தற்போது வடபகுதியின் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கக்கூடிய நல்லூர் முருகன் ஆலய உற்சவ நிகழ்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில் திருடர்களும் சாரி சாரியாக உள்ளூர்களில் இருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் இங்கே வருகை தந்து தமது கைவரிசைகளைக்காட்ட விழைவார்கள்.

கடந்த ஆண்டு உற்சவ கால நிகழ்வுகளின் போது கோவிலின் உட்பிரகாரத்திலும் கோவில் வெளி வீதிகளிலும் பொலீஸாரின் நற் சேவைகளாலும் கண்காணிப்பு நடவடிக்கைகளாலும் களவுகள் மிகவும் குறைக்கப்பட்டிருந்தன.

அதே போன்று இவ்வருடமும் பொலீஸ் சேவை வழங்கப்படும் என எண்ணுகின்றேன்.நல்லூர்ப் பிரதேசம் ஒரு புனித பூமியாக அமைந்துள்ளமையால் பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகளும் அதன் புனிதத்தை பாதுகாக்கக் கூடிய வகையில் ஆசார சீலர்களாகச் சப்பாத்துக்கள் மேல் அங்கிகள் என்பவற்றைக் களைந்து ஆலய உட்பிரகாரங்களில் பிரசன்னமாகி இருப்பார்கள் என உறுதியாக நம்புகின்றேன்.

அதே போன்று வாகன அதி வேகம் பல உயிர்களைத் தினமும் காவு கொள்வதை நீங்கள் புள்ளி விபரங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். வீதிப் போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு இரவு பகல் தொடர்ச்சியாக பணியாற்றுகின்ற போதும் சாரதிகளின் கவனக்குறைவும் அசட்டையான நடவடிக்கைகளும் அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதன.

மது போதையில் வாகனம் செலுத்துதல், மிதமிஞ்சிய வேகத்தில் வாகனத்தைச் செலுத்துதல்,இரவில் முறையான முகப்பு வெளிச்சங்கள் இன்றி செலுத்துதல் போன்ற தவறுகளுக்கு அதியுச்ச தண்டனைகள் வழங்கப்படுகின்ற போதும் இச் செயற்பாடுகள் தொடர்கின்றன எனின் எமது வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஏதோ தவறுகள் இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.

இவை பரிசீலிக்கப்பட்டு மாற்று நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். ஆகவே நாங்கள் மாகாண ரீதியாக இன்று என்ன நடக்கின்றது என்பது பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.

இது பற்றி மாவட்ட, பிரதேச மட்டங்களில் இருந்து கிடைக்கும் அறிக்கைகளைப் பரிசீலிப்பது அவசியமாகின்றது. அதன்பின் மாற்று நடவடிக்கைகள் என்னென்ன எடுக்க வேண்டும் என்று ஆராய்வது அவசியமாகின்றது.

குற்றச் செயல்களை நடைபெறாமல் தடுப்பதே எம்மால் முக்கியமாகக் கருதப்படுகின்றது. இதற்காக சமூகமட்டத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடாத்துவது எமது பொறுப்பாகும்.

சதாகாலமும் மக்களிடையே, சூழலிலே குற்றங்கள் நடைபெறக்கூடும் என்ற விழிப்புணர்வு ஏற்பட நாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

உதாரணமாக நல்லூர் கந்தனைத் தரிசிக்கச் செல்லும் சில பெண்கள் தமது விலையுயர்ந்த நகைகள் ஆபரணங்களைப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு போகின்றார்கள்.

இவர்களை மையமாக வைத்தே களவில் ஈடுபடும் கூட்டங்கள் நடந்துகொள்வதை அவர்கள் அறிந்து கொள்வார்களானால் போலி கவரிங் நகைகளைப் போட்டுக் கொள்ள அவர்கள் முன்வருவார்கள்.

நாம் எமது மக்களை நல்வழிப்படுத்தி பொறுப்புமிக்க குடிமக்கள் ஆக்குவதை எமது குற்க்கோளாகக் கொள்ள வேண்டும். குற்றவியல் தடுப்பில் பொதுமக்களை ஈடுபடுத்துவதே இன்றைய கூட்டத்தின் குறிக்கோள்.

ஆனால் அவை பொலிசாரைப் புறந்தள்ளி நடைபெற முடியாது. நாம் சேர்ந்து பல காரியங்களில் கூட்டிணைந்து நடந்து கொள்ள முடியும் என்று உலகுக்கு எடுத்துக்காட்டுவோம்.

ஆனால் மேலே குறிப்பிட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மட்டும் அமைத்துவிட்டால் அமைதி திரும்பிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. முரண்பாடின்றி நாம் எமது செயற்பாடுகளைக் கொண்டு நடத்த முன்வரவேண்டும்.

மக்களுக்கு உதவுகின்ற சேவை மனப்பான்மையுடைய ஒரு வினைத்திறன் மிக்க கூட்டாக எங்கள் கூட்டணி அமைகின்ற போதே அதன் திருப்தியான சேவை பொது மக்களை சென்றடையும் என தெரிவித்து எனது ஆரம்ப உரையை இந்தளவில் நிறுத்தி எமது கலந்துரையாடல்களுக்கு செல்லலாம் என எண்ணுகின்றேன்.

நாம் இக்கூட்டத்தை 11.30 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும்.

மத்தியானம் கௌரவ சந்திரிக்கா அம்மையாரின் கூட்டம் வேலணையில் நடைபெறுவதால் இக்கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே புதிதாக ஏதேனும் கருத்தை முன்வைப்பதாயின் அவற்றை எமக்கு எடுத்தியம்புமாறு கோரி வைக்கின்றேன். நேரக்கட்டுப்பாட்டை நான் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் கூறி வைக்கின்றேன்.

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர், வடமாகாணம்

SHARE