ஓமந்தையில் முடிவுக்கு வந்தது முதியவரின் உண்ணாவிரதம்!

236

 

வவுனியா ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி 73 வயதான முதியவர் தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளான நேற்று இரவு 9.30 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசினால் வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் பாரிய இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் இறுதியாக மாங்குளம் மற்றும் வவுனியா மதகுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார நிலையம் அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் ஓமந்தை பகுதியை சேர்ந்த விவசாயியான தா.மகேஸ்வரன் 2010 ஆம் ஆண்டு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும், வாக்களிப்பின் படி 21 உறுப்பினர்கள் ஜனநாயக ரீதியாக வாக்களித்து தெரிவு செய்த ஓமந்தையில் ஒதுக்கப்பட்ட காணியிலேயே பொருளாதார மையம் அமையவேண்டும் என கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த 10ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதப்போராட்டத்தில் பல அரசியல்வாதிகள் நேரில் சென்று அவருக்கு பல உத்தரவாதங்களை வழங்கியிருந்தனர்.

எனினும், முதலமைச்சர் ஓமந்தையில் பொருளாதார மையம் அமையும் என்ற உறுதிமொழியை தந்தால் மாத்திரமே தான் உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடுவேன் என மூன்று நாட்களாக போராட்டத்தை தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், த. குருகுலராசா, ப. சத்தியலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா, ஜி.ரி. லிங்கநாதன், இ. இந்திரராசா, முதலமைச்சரின் செயலாளர் வி. கேதீஸ்வரன் ஆகியோர் உண்ணாவிரதம் இடம் பெற்ற இடத்திற்கு சென்று தா. மகேஸ்வரனை பார்வையிட்டதுடன் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அது சாத்தியமற்ற நிலையில் அரசியல்வாதிகளுக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்குமிடையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதுடன், அரசியல்வாதிகள் சிலருக்கிடையிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் அப்பகுதி மக்கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஒன்று திரண்டு வவுனியா மாவட்ட அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்தியதுடன், அவர்களின் ஒருமித்த கருத்தாக ஓமந்தையில் பொருளாதார மையம் அமைக்க நடவடிக்கை எடுப்போம் என கூறவும் வைத்திருந்தனர்.

 

இதனையடுத்து முதலமைச்சரும் தொலைபேசி மூலமாக ஓமந்தையில் மத்திய நிலையத்தினை அமைப்பதற்கு தன்னாலான முயற்சியை எடுப்பதாக கூறியதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தரால் நீராகாரம் வழங்கி உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

SHARE