ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமல் போகச் செய்ய இடமளிக்க முடியாது: ஜே.வி.பி.

224

 

ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமல் போகச் செய்ய இடமளிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலைமை குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தமது பிள்ளைகளுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள காணாமல் போனவர்களின் பெற்றோருக்கு நியாயமான உரிமையுண்டு.

எந்தவொரு ஆட்சியாளரும் அல்லது அரசாங்கமும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பிரஜைகளை காணாமல் போகச் செய்வதனை நாம் நிறுத்த வேண்டும்.

லலித், குகன் போன்ற இளைஞர்கள் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனார்கள். இதற்கு முன்னரும் நாடாளுமன்றில் சட்ட மூலமொன்று கொண்டு வரப்பட்ட போது இந்தத் தரப்பினர் குழியில் (அவைநடுவில்) இறங்கி குழப்பம் விளைவித்தனர்.

சில முக்கியமான திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்த திருத்தங்களை செய்து கொள்ள முடியவில்லை.

சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்திற்கும் அதுவே தேவைப்பட்டது, ஏதேச்சாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சித்தது, அதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கியது.

இந்த இரண்டு தரப்பினரதும் தேவைக்கு அமைய இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

SHARE