அரசாங்கத்தின் கைப்பொம்மையாக எதிர்க்கட்சி செயற்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுவேத நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் நிரந்தர அலுவலக சட்டமூலம் தொடர்பில் நேற்றைய தினமும் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சட்டமூலமொன்றை நிறைவேற்ற வேண்டுமானால் அரசியலமைப்பு , நாடாளுமன்ற நிலையியற்கட்டளை ஆகியன உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும் என குறிப்பிட்டார்.
எனினும் காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலம் அந்த நடைமுறைகளை பின்பற்றி நிறைவேற்றப்படாத காரணத்தால், அது அரசியலமைப்பை மீறி நிறைவேற்றப்பட்ட சட்டவரைவாகவே கருத வேண்டும் என குறிப்பிட்டார்.
இதனை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என தினேஷ் குணவர்தன வலியுறுத்திய போதிலும் அதனை ஏற்பதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல மறுப்பு தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் குறித்த சட்டமூலம் தொடர்பில் நடைபெற்றிருக்கக்கூடிய சிறந்ததொரு விவாதத்தை கூட்டு எதிர்க்கட்சியினரே ஆர்ப்பாட்டம் நடத்தி குழப்பிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்றால் அது தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதற்கு போதியளவு காலஅவகாசம் இருந்து எனவும் யாரும் அதை செய்திருக்கவில்லை எனவும் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலம் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட இருந்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கூட்டு எதிரணி விவாதத்தில் பேசுவதற்கான தமது உரிமையையும் பறித்துவிட்டது என ஜே.வி.பி இன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
இதன்போது கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிற்கும் அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விவாதத்திற்கு ஒருநாள் அதிகமாக வேண்டுமென தமது தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இணக்கமொன்று எட்டப்படாமையே குழப்பத்திற்கு காரணம் என குறிப்பிட்டார்.
ஒழுக்கமின்றி நடந்துகொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விசனத்தை அடுத்து தற்போது நாடகமாடுவதாக ஆளுந்தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக பதிலுக்கு குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.