நல்லாட்சியிலும் தலைவிரித்தாடும் சிங்கள பேரினவாதக் குழுக்களின் அட்டகாசம்

220

ஸ்ரீலங்காவில் பௌத்த மதம் தவிர்ந்த வேற்று மதத்தினருக்கு எதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திலும் பாதுகாப்பு பிரிவினரது அணுசரனையுடன் தொடர்வதாக சர்வதேச மட்டத்திலான இருவேறு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து இனங்களும் சம உரிமையுடன் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை உறுதிப்படுத்தியுள்ளதாக தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் பெருமிதம் வெளியிட்டுவரும் நிலையிலேயே இந்த அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபைக்கு கிடைத்திருக்கும் புதிய தகவல்களுக்கு அமைய எந்தவித இடையூறுகளும் இன்றி அனைத்து இனத்தவர்களும், மதத்தவர்களும் தமது கலாசார, மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த அர்ப்பணிப்போம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் ஸ்ரீலங்காவில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக 270க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களிடையே கிறிஸ்தவர்களுக்கு எதிராக 132 சம்பவங்களும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக 141 சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக இனப்பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய ஐக்கிய நாடுகளின் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதம் தவிர்ந்த பிறமதங்களை இலக்குவைத்து 50க்கும் மேற்பட்ட மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்த சம்பவங்களுடன் ஸ்ரீலங்காவில் அதிகமாக உள்ள பௌத்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகள் நேரடியாக தங்களது பங்களிப்பை நல்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மதங்கள் மற்றும் இனங்களிடையே ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்து கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக 273 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மத, இனப்பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய விசாரணைப் பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவாகியுள்ள பல சம்பவங்களில் சிரேஷ்ட மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் போன்ற உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்பும் காணப்படுவதாக ஸ்ரீலங்காவின் தேசிய கிறிஸ்தவ மறுபிரவேச அமைப்பு (NCEASL) மனித உரிமைகளை விருத்தி செய்வதற்கான மத்திய நிலையம் (CHRD), சிறுபான்மையின மக்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்பு (MRG) ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் வருடாந்த அமர்வு ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகியதோடு எதிர்வரும் 26ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இதற்கிடையில் அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஸ்ரீலங்காவின் பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் பௌத்த மதத்தின் அடிப்படை வாதத்தை பரப்பிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான வைராக்கியம் மற்றும் வெறுப்புணர்வை தூண்டிக்கூடிய அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாகவும், அவ்வாறான பிக்குகளுக்கு அரசாங்கமே ஆதரவு வழங்கி வருவதாகவும் கடந்த 2015ஆம் ஆண்டு மதச்சுதந்திரம் தொடர்பில் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கடந்த வருடம் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக ஸ்ரீலங்காவில் 82 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக முஸ்லிம் மக்களுக்காக காணப்படுகின்ற செயலகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

SHARE