சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கையை அடுத்து வரும் மாதங்களில் முன் வைக்க கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குருணாகல், வெலகெதர மைதானத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது வருட நிறைவு விழாவில் இந்த யோசனையை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.
இந்த யோசனையை முன்வைப்பதற்காக சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் அனுமதியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தனது பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி முறையை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்தின் மத்தியில் உட்பட வாக்குறுதியளித்துள்ளார்.
இதனால் இந்த யோசனைக்கு அவரிடம் இணக்கம் பெற்றுக் கொள்வதென்பது ஒரு கடினமான விடயமாகும் என்பது கட்சியின் சிரேஷ்டர்களின் கருத்தாகும்.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி பதவி காலத்தின் பின்னர் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்காத நிலையில், அந்த பதவி நிறைவு காலத்தில் இடம்பெறும் பொது தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவரை நியமிக்க வேண்டும் என யோசனை கொண்டு வருவது அந்த காலப்பகுதியில் முக்கியமான ஒன்றாகும் என சிரேஷ்ட அமைச்சர்கள் அனுமதித்துள்ளனர்.