கடந்த 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபா வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறிகள் நடைபெற்று வந்தது. 2010ம் ஆண்டு கௌரவ ரிசாட் பதியூதீன் மற்றும் வட மாகாண சபை முன்னாள் ஆளுநர் சந்திரசிறியால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு பூர்வாங்க வேலைகள் நடைபெற்றது.

நேற்றைய தினம் (2016.08.15ம் திகதி) வவுனியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் ஹரிசன் ஆகியோர் மதவுவைத்தகுளத்திலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களை அழைக்காமல் அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் முடிவை அறிவித்துவிட்டு சென்றுள்ளர்கள். இந்த முடிவானது, ஆட்சி மாற்றத்திற்கு மிகப் பலமாகவிருந்த தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் புறக்கணிக்கப்பட்டு, இந்த அரசாங்க அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் எப்படி நடந்து கொண்டார்களோ, இதே நிலைப்பாட்டுடன்தான் இந்த அரசாங்கத்திலும் இந்த அமைச்சர்கள் நடந்து கொள்கிறார்கள்.
குறைந்தபட்சம், 20 கோடி ரூபாவில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தை கூட எதிர்கட்சித் தலைவர் நடத்திய ஜனநாயகரீதியான வாக்கெடிப்பின்படி 21 பேர் ஓமந்தைக்கும் 05 பேர் தாண்டிக்குளத்திற்கும் என்று வாக்களித்தும் அந்த ஜனநாயக ரீதியான முடிவைக்கூட கூட்டமைப்பின் தலைவரால் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்த்து வைக்க முடியவில்லை. முதலமைச்சர் கூட ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என்று 21 பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஜனநாயகரீதியான தீர்ப்பை மீறி அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் ஹரிசன் ஆகியோர் முடிவு எடுப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.

எம்மைப் பிரித்தாள நினைப்பவர்களுக்கு மக்களுடையதும், மக்கள் பிரதி நிதிகளுடையதுமான விருப்பத்தை தீர்க்க முடியாமல் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி, நபர்கள் விருப்பத்தையும் அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும் பிழையான நடவடிக்கைகளுக்கு துணைபோவதும் எமக்கும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்த மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
ஆகவே பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடத் தெரிவை 21 பேர் வாக்களித்தபடியும், 2010 ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் படியும் ஓமந்தையில் அமைப்பதற்குரிய நடவடிக்கையை எதிர்கட்சித் தலைவர் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்களித்த மக்கள் எதிர் பார்க்கிறார்கள். முதலமைச்சரும் மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளித்து ஒரு தலைப்பட்சமாக செயற்படாது இந்த விடயத்தில் அவ் உறுப்பினர்களின விருப்பதுடன் செயற்பட முன்வரவேண்டும்.
மத்திய அமைச்சரவையில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாவட்ட ஒருங்ககிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். அதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அது கூட நடைபெறாது இரு மத்திய அமைச்சர்கள் இத்தீர்மானத்தை எடுத்து இடத்தை தெரிவு செய்துள்ளனர். இது தொடர்பில் எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் கவனம் செலுத்தி குறைந்தபட்சம் இதையாவது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.